செய்திகள்

மோசடி செய்து என்னை வீழ்த்திய ஹான்ஸ் நீமன்: கார்ல்சன் பகிரங்கக் குற்றச்சாட்டு!

27th Sep 2022 12:29 PM

ADVERTISEMENT

 

செஸ் விளையாட்டில் ஹான்ஸ் நீமன் மோசடி செய்து விளையாடுகிறார் என உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்றார். 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது ஹான்ஸ் நீமன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கார்ல்சன். அவர் இதுவரை பங்கேற்ற எந்தவொரு போட்டியிலும் இதுபோல பாதியில் விலகியதில்லை. இதனால் கார்ல்சனின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த ட்வீட்டில், அவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதில், இதுபற்றி நான் பேசினால் எனக்குப் பெரிய பிரச்னை ஏற்படும் என கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மரினோ பேசிய காணொளியை தனது ட்வீட்டுடன் சேர்த்து பகிர்ந்ததால் கார்ல்சனின் இந்த முடிவு புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இணைய வழியிலான செஸ் போட்டிகளில் ஹான்ஸ் நீமன் முறைகேடுகள் செய்து சில ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் அது தொடர்பான சந்தேகம் காரணமாக கார்ல்சன் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. 

சமீபத்தில் நடைபெற்ற ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன். இந்தப் போட்டியிலும் கார்ல்சனும் நீமனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்திலிருந்து விலகினார் கார்ல்சன். இதனால் ஹான்ஸ் நீமன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

ADVERTISEMENT

கார்ல்சனின் இந்த நடவடிக்கை செஸ் உலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹான்ஸ் நீமன் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து விவாதிக்கும் விதமாகவே இதுபோல செய்துள்ளார் கார்ல்சன், இருவருக்கும் இடையிலான இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என செஸ் ரசிகர்களும் வீரர்களும் கோரிக்கை விடுத்தார்கள். இந்த விவகாரம் குறித்து ஃபிடே அமைப்பும் அறிக்கை வெளியிட்டது. செஸ் விளையாட்டில் நடைபெறும் மோசடிகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. 

இந்நிலையில் ஹான்ஸ் நீமன் விவகாரம் தொடர்பாக முதல்முறையாக வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார் கார்ல்சன். அதில் அவர் கூறியதாவது:

ஹான்ஸ் நீமனுடன் விளையாடிய பிறகு சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியிலிருந்து நான் விலகினேன். ஒரு வாரம் கழித்து சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டியில், ஹான்ஸ் நீமனுக்கு எதிராக ஒரு நகர்த்தலுக்குப் பிறகு நான் விலகிவிட்டேன். 

என்னுடைய நடவடிக்கைகள் செஸ் வட்டாரத்தைக் கடுப்பேற்றியதை நான் அறிவேன். நானும் அவ்வாறே உள்ளேன். நான் செஸ் விளையாட விரும்புகிறேன். மேல்மட்ட அளவில் சிறந்த போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். 

செஸ்ஸில் மோசடி செய்வது பெரிய விஷயம். இது விளையாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மோசடி செய்பவர்களைத் தடுக்கும் முறைகளைப் பலப்படுத்த செஸ் நிர்வாகிகள் முயல வேண்டும். சின்க்ஃபீல்ட் கோப்பைப் போட்டிக்குக் கடைசி நேரத்தில் நீமன் அழைக்கப்பட்டபோது அந்தப் போட்டியிலிருந்து விலகலாமா என நினைத்தேன். எனினும் விளையாடினேன். 

வெளிப்படையாகத் தெரிவித்ததை விடவும் ஹான்ஸ் நீமன் அதிக அளவில், சமீபகாலமாக, மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய முன்னேற்றம் அசாதாரணமாக உள்ளன. சின்க்ஃபீல்ட் கோப்பைப் போட்டியில் எனக்கு எதிராக விளையாடியபோது அவரிடம் பதற்றம் வெளிப்படவில்லை, முக்கியமான தருணங்களிலும் ஆட்டத்தில் அவருடைய முழு கவனமும் இல்லை என்றே எனக்குத் தோன்றியது. கருப்புக் காயில் விளையாடிய சிலரே என்னைத் தோற்கடித்துள்ளார்கள். என்னுடைய எண்ணத்தை இந்த ஆட்டம் மாற்றியது.

மோசடியில் ஈடுபடுபவர்களை நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்னுடைய முயற்சியாக கடந்தமுறை மோசடியில் ஈடுபட்டவர்களுடன் விளையாட எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் வருங்காலத்தில் என்ன செய்வார்கள் என்பதை நான் அறிவேன். 

இன்னும் என்னால் கூற முடியும். ஆனால் நீமனிடமிருந்து தெளிவான விளக்கம் பெறாமல் விளக்கமாகப் பேச முடியாது. என்னுடைய நடவடிக்கைகளை வைத்துத்தான் என்னால் பேச முடியும். இனிமேல் என்னால் நீமனுக்கு எதிராக விளையாட முடியாது என்பதை என்னுடைய நடவடிக்கைகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT