செய்திகள்

டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா (2-1): கோலி 63, சூரியகுமாா் 69

26th Sep 2022 01:55 AM

ADVERTISEMENT

ஆஸி. அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி. 6 விக்கெட் வித்தியாசத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் டி20 தொடரில் முதல் ஆட்டத்தை ஆஸி.யும், இரண்டாம் ஆட்டத்தை இந்தியாவும் வென்றிருந்தன. முடிவை நிா்ணயிக்கும் கடைசி ஆட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

ஆஸ்திரேலியா 186/6: முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 186/6 ரன்களைக் குவித்தது. முக்கிய வீரா்கள் ஃபின்ச் 7, ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, வேட் 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டானாா்கள்.

கிரீன் 52, டிம் டேவிட் 54 அதிரடி: தொடக்க பேட்டா் கேமரூன கிரீன் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 3 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 52 ரன்களையும், டிம் டேவிட் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 54 ரன்களுடன் அரைசதம் விளாசினா்.

ADVERTISEMENT

அக்ஸா் படேல் 3 விக்கெட்: இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய பௌலா் அக்ஸா் படேல் 3/33 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

187 ரன்கள் வெற்றி இலக்கு: 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில் தொடக்க பேட்டா்கள் கேஎல் ராகுல் 1, கேப்டன் ரோஹித் 17 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

சூரியகுமாா் சிக்ஸா், பவுண்டரி மழை: அதன்பின் விராட் கோலி-சூரியகுமாா் இணைந்து அபாரமாக ஆடி 3-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சோ்த்தனா். இளம் வீரா் சூரியகுமாா் யாதவ் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி ஹேஸல்வுட் பந்தில் அவுட்டானாா்.

விராட் கோலி 33-ஆவது அரைசதம்: விராட் கோலி தனது 33-ஆவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்தாா். 48 பந்துகளில் 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 63 ரன்களை விளாசி வெளியேறினாா் கோலி.

ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 25 ரன்களுடனும், தினேஷ் காா்த்திக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனா். வெற்றிக்கு 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், 19.5 பந்தில் பவுண்டரி அடித்தாா் ஹாா்திக் பாண்டியா.

19.5 ஓவா்களில் இந்திய அணி 187/4 ரன்களுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. யை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது. ஆஸி. தரப்பில் டேனியல் சாம்ஸ் 2/33 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இந்த வெற்றி மூலம் 2-1 என தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

ADVERTISEMENT
ADVERTISEMENT