செய்திகள்

ஃபெடரருக்காக அழுத நடால்: விராட் கோலி நெகிழ்ச்சி

24th Sep 2022 01:19 PM

ADVERTISEMENT

 

டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற ஃபெடரருக்காக நடால் அழுதது குறித்து உணர்வுபூர்வமாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

ஏடிபி டூர் போட்டிகளில் 24 வருடங்கள் விளையாடிய ரோஜர் ஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 103 சாம்பியன் பட்டங்கள் என கைநிறைய சாதனைகளுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

லேவர் கோப்பைப் போட்டியில் நடாலுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தைத் தனது கடைசி ஆட்டமாக விளையாடினார் ஃபெடரர். ஜேக் ஸ்டாக் - ஃபிரான்சஸ் டியாஃபோ இணையுடன் விளையாடி  4-6, 7-6 (2), 11-9) என தோற்றார்கள் ஃபெடரரும் நடாலும். இதையடுத்து தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஃபெடரர். 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 யு.எஸ். ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஃபெடரர் வென்றுள்ளார். 2021-ல் முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் ஃபெடரர். ஆனால் அந்தக் காயத்திலிருந்து முழுவதுமாகக் குணமாவது தற்போது சாத்தியம் இல்லை என்பதால் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். பல ஆண்டுகளாகத் தன்னுடன் சரிக்குச் சமமாகப் போட்டியிட்ட நடாலுடன் இணைந்து கடைசியாக விளையாடி ஓய்வு பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

நடாலுடன் இணைந்து விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோற்றவுடன் ஃபெடரரின் பிரிவு உபசார விழா டென்னிஸ் அரங்கில் நடைபெற்றது. பல உணர்ச்சிகரமான தருணங்களை அப்போது காண முடிந்தது. முதலில் ஃபெடரர் கண்ணீர் சிந்தினார். இதன்பிறகு அவர் அருகில் இருந்த நடாலும் சோகம் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தார். இரு பிரபல வீரர்கள் அருகருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தது ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. பிறகு ஜோகோவிச் உள்பட பல பிரபல வீரர்கள், ஃபெடரர் குடும்பத்தினர், நண்பர்கள் என உணர்ச்சிகரமான அத்தருணத்தில் பலரும் கண்ணீர் சிந்தினார்கள். ஃபெடரர் விலகும்போது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியும் விலகுவதாகவே உணர்கிறேன் எனப் பேட்டியளித்தார் நடால். 

இந்நிலையில் ஃபெடரரின் ஓய்வு மற்றும் ஃபெடரருக்காக நடால் அழுதது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியதாவது:

போட்டியாளர்கள் இதுபோல நடந்துகொள்ள முடியும் என யார் எண்ணினார்கள்? இதுதான் விளையாட்டின் மகத்துவம். என்னைப் பொறுத்தவரை இதுவரையிலான விளையாட்டுத் தருணங்களின் மிக அழகான படம் இது. உங்களுடைய போட்டியாளர்கள் அழும்போது, கடவுள் அளித்த திறமையைக் கொண்டு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இருவர் மீதும் அதிக மரியாதை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT