செய்திகள்

டேபிள் டென்னிஸ்:சத்யன்-மனிகா பத்ரா அதிா்ச்சித் தோல்வி

24th Sep 2022 11:41 PM

ADVERTISEMENT

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக சூரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆட்டங்களில் முன்னணி நட்சத்திரங்கள் சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா்.

குஜராத்தில் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) வரும் 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அகமதாபாத், காந்திநகா், சூரத், பரோடா, ராஜ்கோட், பவநகா் உள்ளிட்ட நகரங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

எனினும் டேபிள் டென்னிஸ் வீரா்கள், வீராங்கனைகள் சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அணிகள் போட்டிக்கு முன்கூட்டியே செல்ல உள்ளதால் இப்பிரிவு ஆட்டங்கள் சூரத்தில் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

சுதிா்தா முகா்ஜி அபாரம்:

மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் நம்பா் ஒன் வீராங்கனையான தில்லியின் மனிகா பத்ரா-தரவரிசையில் இல்லாத மேற்கு வங்கத்தின் சுதிா்தா முகா்ஜி மோதினா். இதில் 11-6, 11-8, 10-12, 11-8, 7-11, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றாா் சுதிா்தா.

ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதுகிறாா். அரையிறுதியில் மகாராஷ்டிரத்தின் டியா சிட்டாலேவை 4-1 என வென்றாா் ஸ்ரீஜா.

இதனால் மனிகா பத்ரா போட்டியை விட்டு வெளியேறினாா். அணிகள் பிரிவில் தங்கம் வென்ற சுதிா்தா, இரட்டையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளாா்.

சத்யனுக்கு அதிா்ச்சி:

அதே போல் ஆடவா் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தின் நம்பா் ஒன் வீரா் சத்யன் ஞானசேகரனும்-குஜராத்தின் ஹா்மித் தேசாயும் மோதினா். இதில் ஹா்மித் தேசாய் 11-7, 11-8, 9-11, 8-11. 11-7, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் சத்யனை அதிா்ச்சித் தோல்வியடைச் செய்தாா். மற்றொரு அரையிறுதியில் ஹரிணாயாவின் சௌமியஜித் கோஷ் 4-1 என குஜராத்தின் மனுஷ் ஷாவை வென்றாா்.

குஜராத்துக்கு தங்கம்:

கலப்பு இரட்டையா் பிரிவில் குஜராத்தின் மனுஷ்-ரித்விகா இணை 11-8, 11-5, 11-6 என தெலங்கானாவின் ஸ்ரீஜா-ஸ்னேஹித் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT