செய்திகள்

பிரபல வீரர்கள், ரசிகர்கள் கண்ணீர் மழை: டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார் ஃபெடரர்

DIN

ஏடிபி டூர் போட்டிகளில் 24 வருடங்கள் விளையாடிய ரோஜர் ஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 103 சாம்பியன் பட்டங்கள் என கைநிறைய சாதனைகளுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

லேவர் கோப்பைப் போட்டியில் நடாலுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தைத் தனது கடைசி ஆட்டமாக விளையாடினார் ஃபெடரர். ஜேக் ஸ்டாக் - ஃபிரான்சஸ் டியாஃபோ இணையுடன் விளையாடி  4-6, 7-6 (2), 11-9) என தோற்றார்கள் ஃபெடரரும் நடாலும். இதையடுத்து தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஃபெடரர். 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 யு.எஸ். ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஃபெடரர் வென்றுள்ளார். 2021-ல் முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் ஃபெடரர். ஆனால் அந்தக் காயத்திலிருந்து முழுவதுமாகக் குணமாவது தற்போது சாத்தியம் இல்லை என்பதால் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். பல ஆண்டுகளாகத் தன்னுடன் சரிக்குச் சமமாகப் போட்டியிட்ட நடாலுடன் இணைந்து கடைசியாக விளையாடி ஓய்வு பெற்றுள்ளார். 

2018-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற ஃபெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆடவர் என்கிற சாதனையைப் படைத்தார். அப்போது நடால் 16 பட்டங்களையும் ஜோகோவிச் 12 பட்டங்களையும் மட்டுமே பெற்றிருந்தார்கள். அதன்பிறகு ஃபெடரரால் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்ல முடியாததால் நடாலும், ஜோகோவிச்சும் பந்தயத்தில் அவரை முந்திக் கொண்டார்கள். தற்போது நடால் 22, ஜோகோவிச் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். நடால், ஃபெடரர், ஜோகோவிச் ஆகிய மூவரில் முதல் சாதனையாளர் ஃபெடரர் தான்.  2003 முதல் 2007 வரை நடைபெற்ற 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 12 பட்டங்களை வென்று குவித்தார் ஃபெடரர். எத்தகைய ஆதிக்கம் அது என எண்ணிப் பாருங்கள். 
லேவர் கோப்பைப் போட்டியில் ஃபெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே என ஃபெடரரின் காலத்தில் போட்டியிட்ட முக்கிய வீரர்கள் மூவரும் பங்கேற்றார்கள். இந்த நால்வரும் இணைந்து 66 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். 

நடாலுடன் இணைந்து விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோற்றவுடன் ஃபெடரரின் பிரிவு உபசார விழா டென்னிஸ் அரங்கில் நடைபெற்றது. பல உணர்ச்சிகரமான தருணங்களை அப்போது காண முடிந்தது. முதலில் ஃபெடரர் கண்ணீர் சிந்தினார். இதன்பிறகு அவர் அருகில் இருந்த நடாலும் சோகம் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தார். இரு பிரபல வீரர்கள் அருகருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தது ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. பிறகு ஜோகோவிச் உள்பட பல பிரபல வீரர்கள், ஃபெடரர் குடும்பத்தினர், நண்பர்கள் என உணர்ச்சிகரமான அத்தருணத்தில் பலரும் கண்ணீர் சிந்தினார்கள். ஃபெடரர் விலகும்போது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியும் விலகுவதாகவே உணர்கிறேன் எனப் பேட்டியளித்தார் நடால். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT