செய்திகள்

கடைசி சர்வதேச ஆட்டம்: ஜுலான் கோஸ்வாமிக்கு அளிக்கப்பட்ட கெளரவம்

24th Sep 2022 05:43 PM

ADVERTISEMENT

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி.

2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் (353) எடுத்த வீராங்கனை என்கிற சாதனையுடன் அவர் விடைபெறுகிறார். கடைசியாக நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜுலான் விளையாடினார். இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்று வருகிறார். மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி.

ADVERTISEMENT

இந்நிலையில் லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருடன் ஜுலான் கோஸ்வாமியும் கலந்துகொண்டார். இந்திய அணியின் சார்பாக ஜுலான் தான் முன்னிறுத்தப்பட்டார். அவர் தான் தொகுப்பாளரிடம் பேசினார். அந்தத் தருணத்தில் ஜுலான் கோஸ்வாமிக்கு உரிய மரியாதையை வழங்கினார் ஹர்மன்ப்ரீத். மேலும் இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த அனைவரும் கையெழுத்திட்ட சட்டை ஒன்று, ஜுலானுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்காக 16,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT