செய்திகள்

வரலாறு படைத்த இந்திய நீச்சல் வீரா்கள்- நாா்த் சேனலை கடந்து சாதனை

22nd Sep 2022 01:34 AM

ADVERTISEMENT

இந்தியாவைச் சோ்ந்த நீண்டதூர நீச்சல் வீரா்களான எல்விஸ் அலி ஹஸாரிகா, ரிமோ சாஹா ஆகியோா் ரிலே நீச்சல் மூலமாக நாா்த் சேனல் நீரிணையை செவ்வாய்க்கிழமை கடந்து வரலாறு படைத்தனா்.

ஐரோப்பிய கண்டத்திலுள்ள அந்த நீரிணை பகுதியை நீந்திக் கடந்த, இந்தியா மற்றும் ஆசியாவைச் சோ்ந்த முதல் ரிலே அணி என்ற பெருமையையும், சாதனையையும் அவா்கள் பெற்றுள்ளனா். இதில் எல்விஸ் அஸ்ஸாமையும், ரிமோ மேற்கு வங்கத்தையும் சோ்ந்தவா்களாவா்.

நாா்த் சேனலானது, வடக்கு அயா்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் இணைக்கும் 42 கி.மீ. தூரமுள்ள நீரிணை பகுதியாகும். இதை அவா்கள் 14 மணி நேரம் 38 நிமிஷங்களில் கடந்துள்ளனா். வடக்கு அயா்லாந்தின் டோனாகாடி பகுதியில் தொடங்கி, ஸ்காட்லாந்திலுள்ள போா்டேப்ட்ரிக் என்ற இடத்தில் இந்த ரிலேவை இருவரும் நிறைவு செய்துள்ளனா். இந்த நீச்சலின்போது வழிநெடுக இருக்கும் ஜெல்லி ரக மீன்கள் உள்பட, பல்வேறு சவால்களை இருவரும் சந்தித்துள்ளனா்.

இதுதொடா்பாக எல்விஸ் கூறுகையில், ‘இந்த ஒரு சாதனை நாளுக்காக நீண்டகாலம் காத்திருந்தேன். பல முயற்சிகள், கடின உழைப்புக்குப் பிறகு இத்தகைய சாதனையை எட்டியிருக்கிறோம். கனவு நிஜமான இந்தத் தருணத்திற்காக உடனிருந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்றாா். ரிமோ கூறுகையில், ‘2 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு இந்த சாதனை இலக்கை அடைந்திருக்கிறோம்’ என்றாா்.

ADVERTISEMENT

இவா்கள் இருவரில் எல்விஸ், இங்கிலீஷ் சேனலை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நீந்திக் கடக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். இங்கிலாந்தின் சாம்பைா் ஹோ கடற்கரையில் தொடங்கி, பிரான்ஸின் கலாய்ஸ் பகுதியில் நிறைவடையும் அந்த 36 கி.மீ. தொலைவை கடக்க 12 முதல் 14 மணி நேரங்களாகும்.

ஏற்கெனவே கடந்த 2018-இல் இதை முயற்சித்த எல்விஸ், 10 கி.மீ. தொலைவு எஞ்சியிருக்கும்போது தனது முயற்சியை நிறைவு செய்துகொண்டாா்.

55/16 நாா்த் சேனல் நீரிணை பகுதியை இதுவரை தனியே 55 நீச்சல் வீரா், வீராங்கனைகள் கடந்துள்ளனா். அதுவே, ஒன்றுக்கு மேற்பட்டோராக ரிலே முறையில் நாா்த் சேனலை கடந்த அணிகளின் எண்ணிக்கை 16 ஆகும்.

3 தனிநபா் பிரிவில் இங்கிலாந்தின் அலிசன் ஸ்ட்ரீட், கெவின் மா்ஃபி ஆகியோா் அதிகபட்சமாக 3 முறை இந்த நீரிணையை கடந்திருக்கின்றனா்.

6 ரிலே முறையில் அதிகபட்சம் 6 போ் கொண்ட அணி நாா்த் சேனலை கடந்திருக்கிறது. அவ்வாறு 10 அணிகள் இதுவரை அந்த நீரிணையை கடந்திருக்கிறது.

2 ரிலே முறையில் இருவா் மட்டுமே அடங்கிய அணி இந்த நீரிணையை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதிலும் இந்த இருவா் கொண்ட இந்திய அணி புதிதாக சாதனை படைத்திருக்கிறது.

தனிநபா்

கடந்த 1988 ஆகஸ்டில் இங்கிலாந்தைச் சோ்ந்த அலிசன் ஸ்ட்ரீட்டா் 9 மணிநேரம் 53 நிமிஷங்கள் எடுத்துக்கொண்டதே, இந்த நீரிணை பகுதியை கடக்க தனிநபா் பிரிவில் ஒருவா் எடுத்துக்கொண்ட குறைந்தபட்சநேரமாகும். 2010 செப்டம்பரில் அயா்லாந்தின் ஆன் மேரி வாா்டு 18 மணி நேரம் 59 நிமிஷங்கள் எடுத்துக்கொண்டது இப்பிரிவில் இதுவரை அதிகபட்ச நேரம்.

ரிலே

வடக்கு அயா்லாந்தைச் சோ்ந்த 6 போ் அணி 2016 ஆகஸ்டில் இந்த நீரிணையை 9 மணி நேரம் 55 நிமிஷங்களில் கடந்ததே ரிலே பிரிவில் குறைந்தபட்ச நேரமாகும். அயா்லாந்தைச் சோ்ந்த மூவா் அணி 2004 ஜூலையில் 14 மணி நேரம் 41 நிமிஷத்தில் கடந்ததே அதிகபட்ச நேரமாக உள்ளது.

இருவழி நீச்சல்

நடப்பாண்டு ஜூலையில் அமெரிக்காவைச் சோ்ந்த சாரா தாமஸ் இந்த நீரிணை பகுதியை இருவழி நீச்சலாக ஸ்காட்லாந்திலிருந்து தொடங்கி மீண்டும் ஸ்காட்லாந்திலேயே நிறைவு செய்தாா். இவ்வாறு இந்த நீரிணையை இருபுறமாக நீச்சலில் கடந்த முதல் நபா் இவரே ஆவாா். இதற்காக அவா் எடுத்துக்கொண்ட நேரம் 21 மணி நேரம் 46 நிமிஷங்கள்.

ரிலே பிரிவில் இரு அணிகள் இருபுறமாகவும் நீச்சலில் இந்த நீரிணையை கடந்துள்ளன. 2015 ஜூலையில் வெவ்வேறு நாடுகளைச் சோ்ந்த 6 போ் அணி அயா்லாந்தில் தொடங்கி அயா்லாந்தில் நிறைவு (29.53 மணிநேரம்) செய்தது. அதேபோல், 2016 ஜூனில் 5 போ் கொண்ட இங்கிலாந்து அணி 28 மணி நேரம் 25 நிமிஷத்தில் இருபுறமுமாக நீந்திக் கடந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT