செய்திகள்

பிசிசிஐ அறிமுகப்படுத்தும் டி20 இம்பாக்ட் வீரர்: விவரங்கள்

DIN

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அணியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ.

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின்போது கூடுதலாக ஒரு வீரரைச் சேர்த்துக்கொள்ளும்படியான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. இதுகுறித்த மின்னஞ்சலை கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த முயற்சி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்ததாக ஐபிஎல் 2023 போட்டியிலும் இதைத் தொடர முடிவெடுத்துள்ளது. கூடுதல் வீரருக்கு இம்பாக்ட் பிளேயர் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அணியில் உள்ள 11 பேரில் ஒருவரை இம்பாக்ட் வீரர் மாற்றிக் கொள்ளலாம். இரு இன்னிங்ஸில் ஏதாவது ஒன்றில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இம்பாக்ட் வீரர் 14 ஓவர் முடியும் முன்பு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஈடுபடலாம். 

இன்னும் புரியும்படியாகச் சொல்லலாமே!

ஒரு தொடக்க வீரர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்கிறார். அவருக்குப் பதிலாகக் களமிறங்கும் இம்பாக்ட் வீரர், 14-வது ஓவர் முடியும் முன்பு பேட்டிங்கில் ஈடுபடலாம். என்ன ஆனாலும் ஓர் அணி 11 வீரர்களை மட்டுமே பேட்டிங் செய்ய அனுப்ப முடியும். அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கி ஓவர்களும் வீசலாம். 

ஓர் அணி நன்கு பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எடுக்கிறது. அடுத்த இன்னிங்ஸில் ஒரு பேட்டருக்குப் பதிலாகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்த்திக்கொண்டு பந்துவீச்சைப் பலப்படுத்தலாம். ஓர் அணி பந்துவீசி முடித்துவிடுகிறது. தான் பேட்டிங் ஆடும்போது, சரியாக பேட்டிங் செய்யத் தெரியாத பந்துவீச்சாளருக்குப் பதிலாக ஒரு பேட்டரை அணியில் சேர்த்திக்கொள்ளலாம். 

இது சூப்பர் சப் விதிமுறை தானே?

இல்லை. 2005, 2006-ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

இம்பாக்ட் வீரரால் அணிகளுக்கு என்ன லாபம்?

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஒரு இன்னிங்ஸில் ஓவர்கள் குறைக்கப்படும்போது அதற்கேற்றாற்போல எப்போதிருந்து இம்பாக்ட் வீரரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நடுவர்கள் அறிவிப்பார்கள். 

ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும். விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக ஒரு வீரரைத் தடை செய்தால் அவருக்குப் பதிலாக இம்பாக்ட் வீரர் ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT