செய்திகள்

தோனி மட்டுமே என்னைத் தொடர்பு கொண்டார்: கோலி ஆதங்கம்

5th Sep 2022 01:36 PM

ADVERTISEMENT

 

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி மட்டுமே தனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டதாக விராட் கோலி கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கோலி 60 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி இலக்கை ரன்கு விரட்டி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 71 ரன்களும் முகமது நவாஸ் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் எடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய முகமது நவாஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ADVERTISEMENT

ஒன்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகிய பிறகு ஒருவர் மட்டுமே எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டார். அவருடன் இணைந்து இதற்கு முன்பு விளையாடியிருக்கிறேன். அவர் தான் எம்.எஸ். தோனி. பலரிடம் என்னுடைய தொலைப்பேசி எண் உள்ளது. தொலைக்காட்சிகளில் பலரும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால் யாரிடமெல்லாம் என்னுடைய தொலைப்பேசி எண் உள்ளதோ அவர்கள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. மரியாதையும் பந்தமும் யாரிடம் உண்மையாக உள்ளதோ இதுபோன்ற தருணங்களில் வெளிப்படும். ஏனெனில் இரு தரப்பிலும் பாதுகாப்பு உணர்வு மேலோங்கியுள்ளது. தோனிக்கு என்னிடமிருந்து எதுவும் தேவைப்படுவதில்லை. அதேபோலத்தான் எனக்கும். என்னால் அவர் பாதுகாப்பற்ற சூழலை உணரவில்லை. எனக்கும் அப்படித்தான். யாரிடமாவது ஏதாவது நான் சொல்ல விரும்பினால் அவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடுவேன். உதவி செய்வதாக இருந்தாலும். உலகத்தின் முன் நின்று எனக்கு அறிவுரைகள் கூற விரும்பினால் அதற்கு என்னிடம் எந்த மதிப்பும் இல்லை. நான் என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால் என்னிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். நேர்மையுடன் என் வாழ்க்கையை வாழ்கிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT