செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி தோற்றதால் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி!

31st Oct 2022 03:08 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி கட்டாயமாக ஜெயிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரும் ஆசைப்பட்டார்கள். ஆனால் இந்திய அணி கடுமையாகப் போராடியும் தோல்வியே கிடைத்தது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தியாவை வீழ்த்தி 5 புள்ளிகளுடன் குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 7 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். 4 புள்ளிகள் கொண்டுள்ள இந்தியா அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி உறுதியாகி விடும். 

ஆனால் பாகிஸ்தான் அணி, இந்தியாவின் தோல்வியால் புது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

3 ஆட்டங்களில் விளையாடி 2 புள்ளிகளை மட்டும் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, (தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான)அடுத்த இரு ஆட்டங்களிலும்  வென்றாலும் அதிகபட்சமாக 6 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இது மட்டும் போதாது என்பதுதான் அந்த அணிக்கு உள்ள சிக்கல். 

இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தால் 6 புள்ளிகளைக் கொண்டிருக்கும். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் நெட் ரன்ரேட்டில் போட்டி போட வேண்டும். இந்தியாவை வங்கதேசம் வீழ்த்தி விட்டால் அந்த அணிக்கும் 6 புள்ளிகள் கிடைத்து விடும். (வங்கதேசம் கைவசம் தற்போது 4 புள்ளிகள் உள்ளன.) மூன்று அணிகளும் 6 புள்ளிகளைக் கொண்டிருந்தால் ஓர் அணி மட்டுமே அரையிறுதிக்கு நுழைய முடியும். இதனால் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பியது. இப்போது அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாலும் அரையிறுதி உறுதியில்லை என்கிற நிலைக்கு வந்துள்ளது. பெரிய வெற்றிகள், மழை போன்ற அம்சங்கள் பாகிஸ்தானுக்கு எந்தளவுக்கு உதவுகிறது எனப் பார்க்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT