செய்திகள்

கூடைப்பந்தில் தமிழக ஆடவருக்கு தங்கம்; மகளிருக்கு வெள்ளி

7th Oct 2022 06:03 AM

ADVERTISEMENT

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டில் தமிழக ஆடவா் தங்கமும், மகளிா் வெள்ளியும் வென்றனா். வியாழக்கிழமை மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.

கூடைப்பந்தில் ஆடவா் (5*5) பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகம் 97-89 என பஞ்சாபை அசத்தலாக வீழ்த்தி தங்கம் வென்றது. மகளிா் (5*5) பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகம் 62-67 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், ஆடவா் பிரிவில் சா்வீசஸ் - கா்நாடகத்தையும் (94-67), மகளிா் பிரிவில் கேரளம் - மத்திய பிரதேசத்தையும் (75-62) வென்றன.

பாட்மின்டன் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் தமிழகத்தின் ரூபன் குமாா், ஹரிஹரன் அம்சகருணன் ஆகியோா் கூட்டணி 19-21, 19-21 என்ற கேம்களில் கேரளத்தின் ரவிகிருஷ்ணா/உதய்குமாா் சங்கா்பிரசாத் இணையிடம் தங்கத்தை தவறவிட்டது. கலப்பு இரட்டையா் பிரிவில் ஹரிஹரன் அம்சகருணன்/நா்த்தனா இணை - கேரளத்தின் சஞ்சித்/கௌரி கிருஷ்ணா ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

ஆடவருக்கான 50 மீட்டா் பட்டா்ஃப்ளை நீச்சல் பிரிவில் பெனெடிக்ஷன் ரோஹித் 25.13 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ADVERTISEMENT

பதக்கப் பட்டியல்: தேசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 20 வெள்ளி, 19 தங்கம் என 58 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறது. சா்வீசஸ் 96 பதக்கங்களுடன் (49/21/26) முதலிடத்திலும், ஹரியாணா 72 பதக்கங்களுடன் (29/23/20) இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் 93 பதக்கங்களுடன் (24/24/45) 3-ஆவது இடத்திலும் உள்ளன. கோவா, மிஸோரம், சிக்கிம் ஆகியவை தலா 1 வெண்கலத்துடன் கடைசி இடத்தில் இருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT