செய்திகள்

டெஸ்ட்: கதவை மூடிய மொயீன் அலி!

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்ப மாட்டேன் எனப் பிரபல இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியுள்ளார். 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த வருட செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

 இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்டுகள், 121 ஒருநாள், 62 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார் மொயீன் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தனது முடிவை மாற்றிக்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் மெக்குல்லம் எப்போது என்னை அழைத்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் விளையாடத் தயார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான் இங்கிலாந்து அணியினருடன் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவது அற்புதமானது. பல வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு விளையாடச் செல்வதால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தொடராக அது அமையும். மெக்குல்லமிடம் நான் பேசினேன். பாகிஸ்தான் தொடர் பற்றி இருவரும் விவாதித்தோம். கதவு எப்போதும் திறந்திருக்கிறது. இதனால் நான் ஓய்வு பெறும் முடிவைத் திரும்பப் பெற்றதாக எண்ணிக்கொள்ளலாம். அவரிடம் முடியாது எனச் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் கஷ்டமானது. அப்போது நான் சோர்வாக உணர்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். இப்போது ஸ்டோக்ஸ், மெக்குல்லம் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார். 

இந்நிலையில் தன்னுடைய முடிவை மீண்டும் மாற்றிக்கொண்டுள்ளார் மொயீன் அலி. டெய்லி மெயில் ஊடகத்துக்கு எழுதிய கட்டுரையில் அவர் தெரிவித்ததாவது: பாகிஸ்தானில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் நான் பங்கு பெற மாட்டேன். வருத்தமாக உள்ளது. இனிமேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எனக்கு ஆர்வமில்லை. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பற்றி மெக்குல்லத்திடம் மனம் திறந்து பேசினேன். மீண்டும் ஹோட்டலில் ஒரு மாதம் தங்கி என் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. போனில் என்னிடம் நீண்ட பேசினார் மெக்குல்லம். என்னால் முடியாது எனத் தெரிவித்தேன். அவர் புரிந்துகொண்டு விட்டார். வீரர்கள் விளையாடியதைப் பார்த்தபோது மீண்டும் டெஸ்டில் விளையாடத் தோன்றியது. அப்படித்தான் நான் விளையாட நினைத்தேன். ஆனால் அதைப் பற்றி கூடுதலாக யோசித்தால் டெஸ்டில் என் பங்களிப்பு முடிந்தது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் கடுமையானது. பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் என் மனநிலை மாறும் எனத் தெரியவில்லை. ஏராளமான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள், டி20 லீக் போட்டிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் போன்றவற்றால் குடும்பத்துடன் செலவழிக்கக் கூடிய நேரம் முக்கியமானதாக உள்ளது. எனவே என் பக்கமிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கதவை மூடும் நேரம் இது. இங்கிலாந்துக்காக 64 டெஸ்டுகளில் விளையாடியது பெருமைக்குரியதாகவும் கனவு நிறைவேறியதாகவும் உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT