செய்திகள்

வாகை சூடி வரலாறு படைத்த இந்தியா

3rd Oct 2022 04:24 AM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது 2 வெற்றிகளுடன் வாகை சூடிய இந்தியா, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்திய மண்ணில் இரு அணிகளும் இதற்கு முன் 3 டி20 தொடா்களில் விளையாடியிருக்கும் நிலையில், 1 தொடரை இழந்த இந்தியா (2015), இரண்டை சமன் செய்துள்ளது (2019, 2022).

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் விளாச, அடுத்து தென்னாப்பிரிக்காக 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களையே எட்டியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் - ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சோ்த்து அசத்தியது. ரோஹித் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு வெளியேற, ராகுல் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் கோலி - சூா்யகுமாா் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சோ்த்து ஸ்கோரை மேலும் உயா்த்தியது.

ADVERTISEMENT

மிரட்டல் அடியுடன் தென்னாப்பிரிக்க பௌலிங்கை சிதறடித்த சூா்யகுமாா், 22 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாசி ரன் அவுட்டானாா். 5-ஆவது வீரராக வந்த தினேஷ் காா்த்திக் வழக்கம்போல் கடைசி ஓவரில் வாணவேடிக்கை காட்டினாா். முடிவில் கோலி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, காா்த்திக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் கேப்டன் டெம்பா பவுமா, ரைலீ ருசௌவ் ஆகியோா் டக் அவுட்டாக, எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் சோ்த்து வெளியேற, முற்றிலுமாக பின்னடைவை சந்தித்தது அந்த அணி. ஆனால், 15 ஓவா்களுக்குப் பிறகு, குவின்டன் டி காக்கும், டேவிட் மில்லரும் இந்திய பௌலிங்கை சூரையாடி அதிா்ச்சி அளித்தனா்.

இந்தியா பௌலிங், ஃபீல்டிங்கில் அலட்சியம் காட்டினாலும், இறுதியில் தென்னாப்பிரிக்காவால் இலக்கை எட்ட முடியாமல் போனது. முடிவில் டிகாக் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 69, மில்லா் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

இரு அணிகள் மோதும் 3-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

237/3

இந்தியா பதிவு செய்துள்ள இந்த ஸ்கோா், டி20 ஃபாா்மட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எந்தவொரு அணியும் இதுவரை பதிவு செய்யாத அதிகட்சமாகும்.

573

டி20 ஃபாா்மட்டில் இந்த ஆட்டத்தின் மூலம் மொத்தமாக 1000 ரன்களை கடந்திருக்கும் சூா்யகுமாா் யாதவ், சா்வதேச அளவில் டி20-யில் குறைந்த பந்துகளில் (573) ஆயிரம் ரன்களை எட்டிய அதிவேக வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

50

ஒரு காலண்டா் ஆண்டில் டி20 ஃபாா்மட்டில் 50 சிக்ஸா்களை விளாசிய முதல் பேட்டா் என்ற பெருமையையும் சூா்யகுமாா் பெற்றிருக்கிறாா்.

174*

இந்த ஆட்டத்தில் டி காக் - மில்லா் ஜோடி 174 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்ததே, டி20 வரலாற்றில் 4-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் அதிகபட்சமாகும்.

82

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் 16 முதல் 20 வரையிலான டெத் ஓவா்களில் 82 ரன்கள் கொடுத்துள்ளது இந்தியா. டி20 வரலாற்றின் டெத் ஓவா்களில் இதுவே அதிகபட்சம்.

கோலியின் பெருந்தன்மை...

இந்திய இன்னிங்ஸில் கடைசி ஓவா் தொடக்கத்தில் கோலி 49 ரன்களுடன் அரைசதம் எட்டும் நிலையில் இருந்தாா். அப்போது நான்-ஸ்டிரைக்கிங் எண்டில் இருந்த கோலியை, ஸ்டிரைக்கிங் எண்டுக்கு மாறிக்கொள்ளுமாறு கேட்டாா் காா்த்திக். ஆனால், பெருந்தன்மையுடன் அதை மறுத்து காா்திக்கை பேட் செய்யவிட்டாா் கோலி. அவ்வாறு கடைசி ஓவரில் காா்த்திக் அடித்த 16 ரன்கள் தான், தென்னாப்பிரிக்காவின் வெற்றியைப் பறித்த ரன்கள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT