செய்திகள்

தடகளத்தில் அசத்திய தமிழகம்

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான கம்புஊன்றித் தாண்டுதலில் (போல்வால்ட்) தமிழக வீராங்கனைகள் முதல் 3 இடங்களையும் பிடித்து அசத்தியுள்ளனா். ஆடவா் நீளம் தாண்டுதலிலும் தமிழகம் தங்கத்தை தட்டிச் சென்றது.

மகளிருக்கான போல்வால்டில், ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டா் உயரம் தாண்டி தங்கம் வெல்ல, பவித்ரா வெங்கடேஷ் 4 மீட்டருடன் வெள்ளியும், பரணிகா இளங்கோவன் 3.90 மீட்டருடன் வெண்கலமும் பெற்றனா். இதில் ரோஸி மீனா எட்டிய உயரம், அவரது புதிய தனிப்பட்ட பெஸ்ட் ஆகும். மேலும், இது போட்டி சாதனையும் கூட. முன்னதாக, கடந்த 2014-இல் வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டா் உயரத்தை எட்டியிருந்ததே போட்டி சாதனையாக இருந்தது.

ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டருடன் தங்கம் வெல்ல, காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்ற கேரளத்தின் முரளி ஸ்ரீசங்கா் 7.93 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்தாா். மற்றொரு கேரள வீரரான முகமது அனாஸ் யாஹியா 7.92 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.

மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திரத்தின் ஜோதி யாராஜி 11.51 விநாடிகளில் வந்து தங்கத்தை தட்டிச் செல்ல, தமிழகத்தின் அா்ச்சனா சுசீந்திரன் 11.55 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். ஆடவருக்கான 100 மீட்டா் டேஷில் அஸ்ஸாமின் அமலன் போா்கோஹெய்ன் (10.38 விநாடிகள்) முதலிடத்தை எட்ட, தமிழகத்தின் இலக்கியதாசன் (10.44), சிவகுமாா் (10.48) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

ADVERTISEMENT

10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தின் நா்மதா நிதின்/ஸ்ரீகாா்த்திக் சபரி ராஜ் இணை வெண்கலம் வென்றது. சனிக்கிழமை முடிவில் தமிழகம் பதக்கப் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, 6 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT