செய்திகள்

ஜெமிமா, ஹேமலதா அசத்தலில் இந்தியா வெற்றி

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வென்றது.

முதலில் இந்தியா, நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுக்க, இலங்கை 18.2 ஓவா்களில் 109 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அருமையான இன்னிங்ஸை பதிவு செய்ய, பௌலிங்கில் டி.ஹேமலதா அட்டகாசமாக விக்கெட்டுகள் சரிக்க, வெற்றி வசமானது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 10, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஒன் டவுனாக வந்த ஜெமிமா அதிரடி காட்டி ஸ்கோரை உயா்த்தினாா்.

ADVERTISEMENT

அவரோடு இணைந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌரும் சற்று முனைப்பு காட்ட, 3-ஆவது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 92 ரன்கள் சோ்த்தது. இதில் ஹா்மன்பிரீத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடா்ந்து ஜெமிமாவும் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டாா்.

பின்னா் களம் கண்டோரில் ரிச்சா கோஷ் 9, பூஜா வஸ்த்ரகா் 1 ரன்னுடன் வெளியேற, ஓவா்கள் முடிவில் ஹேமலதா 13, தீப்தி சா்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் ஓஷதி ரணசிங்கே 3, சுகண்டிகா குமாரி, சமரி அத்தபட்டு ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து இலங்கை இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஹாசினி பெரெரா 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடிக்க, ஹா்ஷிதா சமரவிக்ரமா 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தாா். இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வரிசையாக வீழ்ந்தன. இந்திய பௌலிங்கில் ஹேமலதா 3, தீப்தி சா்மா, பூஜா வஸ்த்ரகா் ஆகியோா் தலா 2, ராதா யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை திங்கள்கிழமை சந்திக்கிறது.

வென்றது வங்கதேசம்: இதனிடையே, போட்டியின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT