செய்திகள்

ரன் அவுட் விவகாரம்: ஹர்ஷா போக்ளேவுக்கு மறுப்பு தெரிவித்த பென் ஸ்டோக்ஸ்!

DIN

ரன் அவுட் சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த ஹர்ஷா போக்ளேவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் எனப் பிரபல இங்கிலாந்து வீரர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் எனப் பலரும் தீப்தி சர்மாவின் நடவடிக்கையைக் குறை கூறினார்கள். இதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தீப்தி சர்மா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ட்விட்டரில் தெரிவித்ததாவது: விதிமுறைப்படி விளையாடிய ஒரு பெண் மீது இங்கிலாந்து ஊடகம் தொடர்ந்து கேள்வி எழுப்புவது என்னைத் தொந்தரவு செய்கிறது. அதேசமயம் சட்டத்துக்குப் புறம்பான ஆதாயம் பெற்றவர் மீது ஒரு கேள்வியில்லை. அவர் தொடர்ந்து அந்தத் தவறைச் செய்பவரும் கூட. இது ஒரு கலாசாரம் சார்ந்தது. கிரிக்கெட் உலகைப் பெரும்பாலும் ஆண்டதால் இது தவறு என இங்கிலாந்து நினைக்கிறது. கேள்வி எழுப்பியவர்களிடம் காலனிய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவே இங்கிலாந்து எதைத் தவறு என நினைக்கிறதோ அதை மற்ற கிரிக்கெட் உலகமும் தவறு என எண்ண வேண்டும் என்கிற மனநிலையே நீடிக்கிறது, ஆஸ்திரேலியா போல. நாம் எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என அவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் கலாசாரத்தில் அது சரியாக இருக்கும், மற்றவர்களுக்கு அப்படி இருக்காது. இங்கிலாந்து என்ன நினைக்கிறதோ அதையே இதர கிரிக்கெட் உலகம் இனிமேலும் செய்யப் போவதில்லை. எனவே என்ன தவறு என்பது தெரிகிறது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் மோசமானது. ஆனால் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை அப்படிக் கருத முடியாது. இது கலாசாரம் சார்ந்தது என ஏன் நான் சொல்கிறேன் என்றால் அவர்கள் அப்படித்தான் யோசிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். இது தவறு என அவர்கள் நினைப்பதில்லை. பிரச்னை ஏற்படுகிறது. இதனால் யார் மீது தவறு என்கிற ஆராய்ச்சியில் நாமும் குற்றம் செய்தவர்கள் போல் ஆகிவிடுகிறோம். 

பந்துவீச்சாளர் பக்கமுள்ள பேட்டரை ரன் அவுட் செய்வதை இதர நாடுகள் ஆதரிக்கக் கூடாது என இங்கிலாந்து எண்ணுகிறது. அதுபோல ரன் அவுட் செய்த தீப்தி சர்மா மற்றும் மற்றவர்கள் மீது மோசமான விமர்சனங்களை வைக்கிறார்கள். விதிமுறைப்படி விளையாடுவது எளிதானது. அது கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல நம் கருத்தை அடுத்தவர் மீது திணிக்க வேண்டாம். பந்துவீச்சாளரின் கை உச்சியில் இருக்கும்போது மறுமுனையில் உள்ள பேட்டர், கிரிஸுக்குள் தான் இருக்க வேண்டும் என்கிறது விதிமுறை. அதை மதித்து நடந்தால் கிரிக்கெட் ஆட்டங்கள் அமைதியாக நடைபெறும். சட்டத்தை நீதிபதிகள் செயல்படுத்துவது போல கிரிக்கெட்டிலும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் தீப்தி மீதான விமர்சனங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. விதிமுறைப்படி அவர் விளையாடினார். எனவே அவர் மீதான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 

இந்நிலையில் ஹர்ஷா போக்ளேவின் ட்வீட்களை முன்வைத்து ட்விட்டரில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அவர் கூறியதாவது:

ஹர்ஷா, மன்கட் விவகாரத்தில் (ரன் அவுட்) மக்களின் கருத்துகளைக் கொண்டு கலாசாரத்தை விமர்சனம் செய்யலாமா? 2019 உலகக் கோப்பை நடைபெற்று இரண்டு வருடங்களாகி விட்டன. இன்றைக்கும் பலவிதமாக என்னைத் திட்டிப் பதிவுகள் எழுதுகிறார்கள் இந்திய ரசிகர்கள். இது உங்களைத் தொந்தரவு செய்யவில்லையா? இந்த விவகாரம் தொடர்பான (இங்கிலாந்து வீரர்களின் கருத்துகள்) கலாசாரம் தொடர்புடையதா? நிச்சயமாக இல்லை. ஓவர்த்ரோ தொடர்பாக உலகெங்கும் உள்ள ரசிகர்கள் என்னிடம் கருத்து தெரிவிகிறார்கள். அதேபோல மன்கட் விக்கெட் தொடர்பாக எல்லோரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து மக்கள் மட்டுமா இதற்குக் கருத்து தெரிவித்தார்கள்? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக உலகில் உள்ள மற்றவர்களின் கருத்து என்ன? ரன் அவுட் சம்பவம் தொடர்பாக நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்துக்குள் இங்கிலாந்து கலாசாரத்தைக் கொண்டு வருவதைப் பற்றியே பேசுகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT