செய்திகள்

மழையால் நழுவிப்போன வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

30th Nov 2022 02:58 PM

ADVERTISEMENT

 

மழையால் 3-வது ஒருநாள் ஆட்டம் முழுமையாக நடைபெறாத காரணத்தால் ஒருநாள் தொடரை 1-0 என வென்றுள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளது இந்திய அணி. டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20யை இந்தியா வென்றது. 3-வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

3-வது ஒருநாள் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக மில்ன் தேர்வானார். இந்திய அணியில் மாற்றமில்லை.

ADVERTISEMENT

2 பவுண்டரிகள் அடித்த ஷுப்மன் கில் 13 ரன்களிலும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்த கேப்டன் ஷிகர் தவன் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ரிஷப் பந்த் 10, சூர்யகுமார் யாதவ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 25 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 

59 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் நன்கு விளையாடி வந்த ஷ்ரேயஸ் ஐயர், 49 ரன்களில் ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது நிலை வீரராகக் களமிறங்கினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். இதன்பிறகு தீபக் ஹூடா, தீபக் சஹார் தலா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு இந்திய அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு வாஷிங்டன் வசம் வந்தது. அவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தார். 

இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. 64 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இந்திய அணியின் தூணாக இருந்தார் வாஷிங்டன் சுந்தர். ஆடம் மில்ன், டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

நியூசிலாந்துக்கு அருமையான தொடக்கம் அமைந்தது. முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. ஃபின் ஆலன் 50 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்பிறகு 57 ரன்களில் உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டமிழந்தார். 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. டிஎல்எஸ் முறைப்படி முடிவை அறிவிக்க வேண்டுமென்றால் 20 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நியூசிலாந்து அணி அப்போது கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருந்தபோதும் மீதமுள்ள இரு ஓவர்களை வீச முடியாமல் மழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் 3-வது ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்த நியூசிலாந்து அணியால் 2 ஓவர்களுக்குத் தொடர்ந்து விளையாட முடியாத காரணத்தால் வெற்றியை ருசிக்க முடியாமல் போனது. எனினும் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 1-0 என வென்றது. தொடர் நாயகனாக டாம் லதம் தேர்வானார். 

Tags : Latham
ADVERTISEMENT
ADVERTISEMENT