செய்திகள்

அவமானப்பட்ட கத்தார், தொடரும் ஈரானின் சோகம்: 10-வது நாள் புள்ளிவிவரங்கள்!

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்றைய (10-வது நாள்) ஆட்டங்களின் முடிவில் செனகல் அணி ஈகுவடாரை 2-1 எனவும் நெதர்லாந்து அணி செனகலை 2-0 எனவும் அமெரிக்க அணி ஈரானை 1-0 எனவும் இங்கிலாந்து அணி வேல்ஸை 3-0 எனவும் தோற்கடித்தன. 

நேற்றைய ஆட்ட முடிவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள்:

* பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. நேற்றைய ஆட்டங்களின் முடிவில் நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டிசம்பர் 3 அன்று அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் டிசம்பர் 4 அன்று இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன.

* உலகக் கோப்பையை நடத்திய நாடு (கத்தார்) மூன்று ஆட்டங்களிலும் தோற்பது இதுவே முதல்முறை. 

* கடைசியாக விளையாடிய 5 உலகக் கோப்பைகளில் 4-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதியடைந்துள்ளது. அமெரிக்க அணி கடைசியாக 2002-ல் காலிறுதிக்கு முன்னேறியது. 

* ஒரு கோல் அடித்து அமெரிக்க அணி வெற்றி பெறவும் அடுத்தச் சுற்றுக்குச் செல்லவும் உதவியுள்ளார் கிறிஸ்டியன் புலிசிக். 2016-ல் அவர் அறிமுகமான நாள் முதல் வேறு எந்த வீரரை விடவும் 22 கோல்கள் அடித்தும் 11 கோல்கள் அடிக்க உதவியும் என 33 கோல்கள் அடிக்கப் பங்களித்துள்ளார். 

* நேற்று விளையாடிய அமெரிக்க அணியின் சராசரி வயது 24 (24 வருடங்கள், 321 நாள்கள்). இந்த உலகக் கோப்பையில் வேறு எந்த அணியும் இத்தனை இளம் வீரர்களுடன் களமிறங்கியதில்லை. 23 வயது டைலர் ஆடம்ஸ், இந்த உலகக் கோப்பையின் இளம் கேப்டன். 

* 1978 முதல் ஆறு முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ள ஈரான் அணி, இதுவரை ஒருமுறை கூட நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 2-6 எனத் தோற்ற ஈரான் அணி அடுத்த ஆட்டத்தில் வேல்ஸை 2-0 எனத் தோற்கடித்தது. நேற்றைய ஆட்டத்தை டிரா செய்திருந்தாலே அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்திருக்கலாம். ஆனால் தோல்வியடைந்ததால் ஈரான் அணி வெளியேறியுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு எதிரான ஆட்டம் டிரா ஆகியிருந்தாலே அமெரிக்க அணி போட்டியிலிருந்து வெளியேறியிருக்கும். ஆனால் ஒரு கோலடித்து வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.

* உலகக் கோப்பையில் 18 ஆட்டங்களில் விளையாடியும் ஈரான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்ததில்லை. இதற்கு 2-வது இடம். 23 ஆட்டங்களில் விளையாடியும் நாக் அவுட் சுற்றுக்குச் செல்லாத ஸ்காட்லாந்து முதலிடத்தில் உள்ளது. 

* 1998 உலகக் கோப்பையில் ஈரான் அமெரிக்காவை வெளியேற்றியது. 24 வருடங்கள் கழித்து ஈரானை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.  

* உலகக் கோப்பையில் 100 கோல்களை அடித்துள்ளது இங்கிலாந்து. இந்த இலக்கைத் தொட்ட 7-வது அணி. பிரேசில், ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, இத்தாலி, பிரான்ஸ் ஸ்பெயின் ஆகிய அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பையில் 100 கோல்களை அடித்துள்ளன. 

* முதல்முறையாக குரூப் ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளது இங்கிலாந்து. 1954, 2018-ல் தலா 8 கோல்களை அடித்தது. 

* 2002-ல் டேவிட் பெக்கமுக்குப் பிறகு 3 கோல்கள் அடிக்க உதவியுள்ளார் இங்கிலாந்தின் ஹேரி கேன். 

* உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 21 ஆட்டங்களில் ஆப்பிரிக்க நாடுகளால் வெற்றி பெற முடியவில்லை. 17 தோல்விகள், 4 டிராக்கள். ஈகுவடாரை 2-1 என வீழ்த்தி இந்த நிலையை மாற்றியுள்ளது செனகல். அதற்கு முன்பு 1990-ல் கேமரூன் அணி, கொலம்பியாவை வீழ்த்தியது. 

* 66 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள செனகல் கேப்டன் கலிடு குலிபாலி நேற்று தான் தனது முதல் சர்வதேச கோலை அடித்தார். அதற்கே தனது நாட்டை நாக் அவுட் சுற்றுத் தகுதியடையச் செய்துவிட்டார். உலகக் கோப்பையில் கோலடித்த மூத்த வீரரும் (31 வயது) குலிபாலி தான். 

* உலகக் கோப்பையில் 2-வது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது செனகல். இதற்கு முன்பு 2002-ல். தற்போது செனகல் அணியின் பயிற்சியாளரான சிஸ்ஸே அப்போது கேப்டனாக இருந்தார். உலகக் கோப்பையில் ஆப்பிரிக்க அணிகளில் அதிகபட்சமாக நைஜீரியா 3 முறையும் கானா, செனகல் ஆகிய அணிகள் 2 முறையும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. 

* 2002, 2010, 2022 உலகக் கோப்பைகளில் ஆப்பிரிக்க அணிகள் அதிக வெற்றிகளை (4) அடைந்துள்ளன.  

* இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் கத்தார் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அந்த அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. கோல் வித்தியாசம் -6. உலகக் கோப்பையை நடத்திய வேறு எந்த நாட்டுக்கும் இந்நிலை ஏற்பட்டதில்லை. 

* 2006-க்குப் பிறகு ஜேம்ஸ் ரோட்ரிகஸ், மெஸ்ஸி (இருவரும் 2014-ல்) ஆகிய இருவரும் மட்டும் தான் மூன்று குரூப் ஆட்டங்களிலும் கோல்கள் அடித்திருந்தார்கள். இம்முறை நெதர்லாந்து வீரரான கோடி காக்போ மூன்று குரூப் ஆட்டங்களிலும் கோல்கள் அடித்துள்ளார். இதுபோல கோல்கள் அடித்த முதல் நெதர்லாந்து வீரரும் காக்போ தான். 

* இதற்கு முன்பு 10 உலகக் கோப்பையில் விளையாடிய நெதர்லாந்து அணி ஒருமுறை கூட நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் இருந்ததில்லை. இந்தமுறையும் அதைச் சாதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT