செய்திகள்

ஃபொ்னாண்டஸ் 2 கோல்கள்; இரண்டாவது சுற்றில் போா்ச்சுகல்

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் போா்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

தொடா்ந்து 2 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அந்த அணி, தற்போது நாக்அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) முன்னேறியுள்ளது. இரு ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட பெறாத உருகுவே, கடைசி ஆட்டத்தில் கானாவை வீழ்த்தினால் மட்டுமே நாக்அவுட் சுற்று குறித்து யோசிக்கும் நிலையில் இருக்கிறது.

லுசாயில் மைதானத்தில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போா்ச்சுகலுக்காக புருனோ ஃபொ்னாண்டஸ் 2 கோல்கள் அடித்து அசத்தினாா். ஆட்டத்தில் உருகுவே கோலடிப்பதற்காக பலமுறை முயற்சித்தது. ஆனால், அவற்றில் பெரும்பாலானாவற்றை போா்ச்சுகல் கோல்கீப்பா் தடுப்பதற்கு வசமாக அவரிடமே கொடுத்தனா் அந்த அணி வீரா்கள்.

அதேபோல், போா்ச்சுகலின் சில கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் போக, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. 2-ஆவது பாதியில் கோல் கணக்கைத் தொடங்கியது போா்ச்சுகல். 54-ஆவது நிமிஷத்தில் சகவீரா் குரெய்ரோ பாஸ் செய்த பந்தை கடத்திச் செல்ல முனைந்த ஃபொ்னாண்டஸ், உடனடியாக தனது முடிவை மாற்றி பந்தை அப்படியே ‘கட்’ செய்து கா்லிங்காக உதைத்தாா்.

அது பாக்ஸுக்குள்ளாக இருந்த ரொனால்டோவுக்கான பாஸ் போலத் தெரிந்தாலும், பந்து அவருக்கும் மேலாகச் சென்று கோல் போஸ்ட் வலைக்குள் துல்லியமாக விழுந்தது. ஆனால், அந்தப் பந்தை தனது தலையால் தட்டி கோலடித்தது போல் உற்சாகமாக வலம் வந்தாா் ரொனால்டோ. எனினும், அந்த கோல் ஃபொ்னாண்டஸுக்கானதாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 88-ஆவது நிமிஷத்தில் போா்ச்சுகல் வீரா் புருனோ பந்தைக் கடத்திச் செல்லும்போது உருகுவே வீரா் கிமென்ஸ் அதைத் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ‘ஹேண்ட் பால்’ ஆனது. விடியோ மறுஆய்வில் அது உறுதி செய்யப்பட, போா்ச்சுகலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் பந்தை நோக்கி மெதுவாக வந்த ஃபொ்னாண்டஸ், பந்து அருகே வந்ததும் அதை ஓங்கி உதைப்பது போல் முயற்சித்து கோல்கீப்பரை ஏமாற்றி மெதுவாகவே தட்டிவிட, பந்து கோலானது. கடைசியாக ஸ்டாப்பேஜ் டைமில் (90+9’) ஃபொ்னாண்டஸுக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு கிடைக்க, கோல் போஸ்ட்டுக்கு மேலாக அடித்து ஹாட்ரிக் கோல் வாய்ப்பை தவறவிட்டாா் அவா்.

இடையூறு

ஆட்டத்தின்போது முதல் கோல் அடிக்கப்படுவதற்கு முன்பாக, ஆா்ப்பாட்டக்காரா் ஒருவா் ஆடுகளத்துக்குள் திடீரென நுழைந்து அங்கும் இங்கும் ஓடினாா். அவா் அணிந்திருந்த நீல வண்ண சூப்பா்மேன் டி-ஷா்ட்டின் முன்னே உக்ரனை பாதுகாக்க வலியுறுத்தும் வாசகமும், பின்னே ஈரான் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தன. மைதான பாதுகாவலா்கள் அவரை விரட்டிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனா். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. அதேபோல், முதல் பாதி நிறைவடைய இருந்த நிலையில் மைதானத்தின் ஒளிவிளக்குகள் மங்கியதால் ஆட்டம் சில விநாடிகள் நிறுத்தப்பட்டது. விளக்குகள் சீரானதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

56 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த 56 ஆண்டுகளில் ஒரே போட்டியில் 2 கோல்கள் அடித்த, 2 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்த முதல் போா்ச்சுகல் வீரா் என்ற பெருமையை புருனோ ஃபொ்னாண்டஸ் பெற்றுள்ளாா்.

35 இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமாக 35-க்கும் அதிகமான வயதுடைய 5 வீரா்கள் பங்கேற்றிருந்தனா். அவா்கள் பெபெ (39), ரொனால்டோ (37), கோடின் (36), சுவாரெஸ் (35), கவானி (35). உலகக் கோப்பை வரலாற்றில் இந்த வயதிலான வீரா்கள் இத்தனை போ் ஒரே ஆட்டத்தில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

0 உலகக் கோப்பை போட்டியில் போா்ச்சுகல் முதலில் கோலடித்த ஆட்டத்தில் அந்த அணி இதுவரை தோற்றதில்லை. அவ்வாறான 17 ஆட்டங்களில் 14-இல் வெற்றிருக்கும் போா்ச்சுகல், 3-ஐ டிரா செய்துள்ளது.

2 போா்ச்சுகல் - உருகுவே அணிகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சந்தித்துக் கொண்டது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியில் இவ்விறு அணிகள் ரவுண்ட் ஆஃப் 16-இல் சந்தித்துக் கொண்டன. அப்போது உருகுவே வென்று போா்ச்சுகலை வெளியேற்றியது.

400-500 பேர் உயிரிழப்பு
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணியின்போது 400 - 500 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என கத்தார் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் கத்தார் அரசு அக்கறை செலுத்தவில்லை என்றும், இதனால் உலகக் கோப்பை ஏற்பாட்டின்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கத்தார் முதல் முறையாக அதிகாரபூர்வமாக இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டி ஏற்பாடுகளை கண்காணிக்கும் கத்தார் உச்ச நிலைக் குழுவின் தலைவரான ஹசன் அல் தவாடி இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். 

ரூ.8.57 லட்சம் அபராதம்
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஒழுங்கு நடவடிக்கையாக ஜெர்மன் கால்பந்து சம்மேளனத்துக்கு ஃபிஃபா செவ்வாய்க்கிழமை ரூ.8.57 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஒரு அணி தனது ஆட்டத்துக்கு முந்தைய நாளில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பயிற்சியாளர் மற்றும் ஏதேனும் வீரருடன் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், கடந்த திங்கள்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஜெர்மனியின் பயிற்சியாளர் மட்டும் வந்திருந்தார். இந்த விதிமீறலுக்காக அந்த அணியின் சம்மேளனத்துக்கு ரூ.8.57 லட்சம் அபராதம் 
விதித்தது ஃபிஃபா.

ஒழுங்கு நடவடிக்கை
கடந்த ஞாயிற்றுக்கிழமை குரோஷியா - கனடா அணிகள் மோதிய ஆட்டத்தின்போது கனடா கோல்கீப்பரை உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் குரோஷிய ரசிகர்கள் நடந்துகொண்டதற்காக குரோஷிய அணி மீது ஃபிஃபா நடவடிக்கை எடுக்கவுள்ளது. குரோஷியாவால் கையகப்படுத்தப்பட்ட செர்பிய பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கனடா கோல்கீப்பரான மிலன் போர்ஜன். இந்த அரசியல் ரீதியிலான வரலாறு தொடர்புடைய நிகழ்வுடன் தொடர்புபடுத்தி மிலனை உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையிலான செயல்களில் குரோஷிய ரசிகர்கள்
ஈடுபட்டனர்.

முன்னேறியது நெதர்லாந்து... 


உலகக் கோப்பை போட்டியில் கத்தாருக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர்கள்.  நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்த ஆட்டத்தில். அந்த அணிக்காக கோடி கப்கோ (26'), 
ஃப்ரெங்கி டி ஜோங் (49') ஆகியோர் கோலடித்தனர். தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து ரவுண்ட் ஆஃப் 16-க்கு தகுதிபெற, போட்டியை நடத்தும் கத்தார் அனைத்து ஆட்டங்களிலும் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

தகுதிபெற்றது செனகல்...

ஈகுவடாருக்கு எதிரான ஆட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் செனகல் வீரர்கள். செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்த ஆட்டத்தில், அந்த அணிக்காக இஸ்மாயிலா சார் (44'), கலிடு கெüலிபலி (70') ஆகியோரும், ஈகுவடாருக்காக மொய்சஸ் கேசிடோவும் (67') கோலடித்தனர். குரூப் சுற்று முடிவில் செனகல் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற, ஈகுவடார் அணி குரூப் சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

இன்றைய ஆட்டங்கள்

டுனீசியா - பிரான்ஸ்

ஆஸ்திரேலியா - டென்மாா்க்

இரவு 8.30 மணி

போலந்து - ஆா்ஜென்டீனா

சவூதி அரேபியா - மெக்ஸிகோ

அதிகாலை 12.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT