செய்திகள்

யார் அடித்த கோல் அது?: 9-ம் நாளின் சுவாரசியமான புள்ளிவிவரங்கள்!

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பிரேசில், போர்ச்சுகல், கானா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. கேமரூன் - செர்பியா ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

உருகுவே அணியை 2-0 என வீழ்த்தியது போர்ச்சுகல். முதல் ஆட்டத்தில் கானாவை 3-2 என வீழ்த்தியது போர்ச்சுகல். டிசம்பர் 2 அன்று தனது கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. 

பிரேசில் அணி, ஸ்விட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

* 2022 உலகக் கோப்பையில் பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

* கேமரூன் அணி உலகக் கோப்பையில் இதற்கு முன்பு கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த வருடம் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த கேமரூன், நேற்று செர்பியாவை 3-3 என டிரா செய்தது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளைக் கண்ட அணிகளில் கேமரூனுக்கு 2-வது இடம். மெக்சிகோ அணி அதிகபட்சமாகத் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. 

* உலகக் கோப்பையில் கேமரூன் அணி, கடைசியாக பெற்ற வெற்றி 2002-ல், சவூதி அரேபியாவை 1-0 என வென்றது. அடுத்த வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது. 

* கேமரூன் அணி 1982 முதல் 8-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. உலகக் கோப்பையில் நேற்றுதான் முதல் முறையாக 3 கோல்களை அடித்துள்ளது. 

* உலகக் கோப்பையில் முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் இரு கோல்களை அடித்த அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது செர்பிய அணி. 

* உலகக் கோப்பையில் இரு கோல்கள் பின்தங்கி பிறகு வெற்றியோ டிராவோ அடைந்த 3-வது ஆப்பிரிக்க அணி, கேமரூன். உலகக் கோப்பையில் ஓர் அணி இரு கோல்கள் பின்தங்கிய ஆட்டங்களில் 13 முறை மட்டுமே டிரா செய்துள்ளன. 428 ஆட்டங்களில் தோல்வி. 9 அணிகள் மட்டுமே 2 கோல்கள் பின்தங்கிய பிறகு வெற்றியடைந்துள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கிறபோது கேமரூன் மகத்தான சாதனையைச் செய்துள்ளது. 

* செர்பியா - கேமரூன் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. உலகக் கோப்பை வரலாற்றில் இது 6-வது 3-3 டிரா. முதல்முறையாக அடுத்தடுத்து இரு உலகக் கோப்பைகளில் 3-3 என ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. 2018-ல் போர்ச்சுகல் - ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிரா ஆனது.

* உலகக் கோப்பையில் கானாவுக்காக கோலடித்த முதல் தடுப்பாட்ட வீரர் முகமது சலிசு. 

* உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்த முதல் தென் கொரிய வீரர் சோ கியூ சங். மேலும் ஒரே ஆட்டத்தில் தலையால் முட்டி இரு கோல்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 

* உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்த முதல் கானா வீரர், முகமது குடுஸ். 22 வயதில் கோல்கள் அடித்ததால், ஒரு உலகக் கோப்பை ஆட்டத்தில் இரு கோல்களை அடித்த 2-வது இளம் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார். 

* கேமரூன் போல, கானாவும் முதல்முறையாக உலகக் கோப்பையில் ஒரே ஆட்டத்தில் 3 கோல்களை அடித்துள்ளது. 

* உலகக் கோப்பையில் தரவரிசையில் மிகவும் கீழே உள்ள அணி, கானா. 61-வது இடம். அந்த அணியிடம் 28-வது இடத்தில் உள்ள தென் கொரியா தோற்றுள்ளது. (கானாவுக்கு மேலே போட்டியை நடத்தும் கத்தார் 50-வது இடத்திலும் சவூதி அரேபியா 51-வது இடத்திலும் உள்ளன.)

* உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆப்பிரிக்க நாடு, நைஜீரியா. 6 வெற்றிகள். தற்போது 5 வெற்றிகளுடன் கானா 2-வது இடத்தில் உள்ளது. 

* பிரேசில் அணி தொடர்ச்சியாக 14-வது முறையாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. 

* உலகக் கோப்பையில் கோலடித்த 85-வது பிரேசில் வீரர் கேஷ்மிரோ. 

* 1982 முதல் 2010 வரை தொடர்ச்சியாக 8 உலகக் கோப்பையில் முதல் 2 ஆட்டங்களிலேயே நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்றது பிரேசில். அந்தளவுக்குப் பலம் பொருந்திய அணி. அதற்குப் பிறகு இம்முறைதான் முதல் 2 ஆட்டங்களிலேயே அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது பிரேசில். 

* தனது 4-வது உலகக் கோப்பை ஆட்டத்தில் கோலடித்துள்ளார் போர்ச்சுகலின் புரூனோ பெர்னாண்டஸ். நேற்று மட்டும் இரு கோல்கள். இந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அடித்த 5 கோல்களில் 4 கோல்கள் அடிக்க அவர் உதவியுள்ளார். இரு கோல்களை அவர் அடித்ததுடன் இரு கோல்களை மற்ற வீரர்கள் அடிக்கவும் உதவியுள்ளார். இந்த நூற்றாண்டில், ரொனால்டோ விளையாடிய 5 உலகக் கோப்பை உள்பட, வேறு எந்த போர்ச்சுகல் வீரரும் ஒரே உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடிக்கப் பங்களித்ததில்லை. 

* போர்ச்சுகல் அணி 8-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை. யூரோ 2016 போட்டியை வென்றது மட்டுமே அந்த அணியின் பெரிய சாதனை. 

* நேற்று போர்ச்சுகலின் முதல் கோலை பிரபல வீரர் ரொனால்டோ தான் தலையால் முட்டி அடித்தது போல இருந்தது. ரொனால்டோ கொண்டாடிய விதமும் அதைத்தான் உணர்த்தியது. ஆனால் புரூனோ பெர்னாண்டஸ் அடித்த ஷாட் தான் கோலாக மாறியதாக பிறகு அறிவிக்கப்பட்டது. புரூனோ அடித்த ஷாட்டைத் தலையால் முட்டித் தள்ள ரொனால்டோ முயன்றாலும் பந்து அவர் தலையைக் கடந்து சென்று கோலாக மாறியது. இதனால் கோலடித்த பெருமை புரூனோ பெர்னாண்டஸுக்கு வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT