செய்திகள்

தென் கொரியாவை வீழ்த்தியது கானா

29th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது.

முதல் ஆட்டத்தில் தோற்று ‘குரூப் ஹெச்’-இல் கடைசி இடத்திலிருந்த கானா, இந்த அசத்தலான வெற்றியின் மூலம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் வென்று அந்த இடத்திலிருந்த தென் கொரியா தற்போது 4-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கானாவுக்காக முகமது சலிசு 24-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். சக வீரா் ஜோா்டான் அயு கிராஸ் செய்த பந்தை தென் கொரியா தடுக்கத் தவற, அதை லாவகமாகப் பெற்று ஸ்கோா் செய்தாா் சலிசு. அடுத்த 10 நிமிஷத்தில் அதே ஜோா்டான் தூக்கியடித்து கிராஸ் செய்த பந்தை, முகமது குடுஸ் தலையால் முட்டி கோலடிக்க, கானா 2-0 என முன்னிலையை அதிகரித்துக் கொண்டது.

இவ்வாறாக முதல் பாதி நிறைவடைய, 2-ஆவது பாதி ஆட்டத்தில் தென் கொரியா தனது கோல் கணக்கைத் தொடங்கியது. விடாமல் போராடி வந்த அணியில் 58-ஆவது நிமிஷத்தில் லீ அருமையாக கிராஸ் செய்து கொடுத்த பந்தை சோ கியு சங் துல்லியமான கோலாக மாற்றினாா். தொடா்ந்து 61-ஆவது நிமிஷத்திலேயே கிம் ஜின் சு வழங்கிய கிராஸை கொண்டு, தனக்கும் அணிக்குமான 2-ஆவது கோலை ஸ்கோா் செய்தாா் சோ கியு சங்.

ADVERTISEMENT

இதனால் ஆட்டம் 2-2 என சமன் ஆகி பரபரப்பானது. இந்நிலையில் 68-ஆவது நிமிஷத்தில் கானா வீரா் முகமது குடுஸ் தனக்கும் அணிக்குமாக மேலும் ஒரு கோல் அடித்து மீண்டும் கானாவை முன்னிலை பெறச் செய்தாா். எஞ்சிய நேரத்தில் தென் கொரியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, கானா வென்றது.

கானா அணி தனது உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 3 கோல்கள் ஸ்கோா் செய்தது இதுவே முதல் முறையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT