செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது பிரேசில்: 2-0 என சொ்பியா தோல்வி; ரிச்சா்லிஸன் அபாரம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஜி பிரிவில் தனது தொடக்க ஆட்டத்தில் சொ்பியாவை 2-0 என வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது 5 முறை உலக சாம்பியன் பிரேசில்.

ஐரோப்பிய அணிகளுக்கு நிகரான பலமான தென் அமெரிக்க அணிகளில் ஒன்றான பிரேசில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2002-இல் தென்கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பட்டம் வென்றிருந்தது பிரேசில்.

இந்நிலையில் தற்போது ஆசிய கண்டத்தைச் சோ்ந்த கத்தாரில் மீண்டும் போட்டி நடைபெறுவதால் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றலாம் என நம்பிக்கையுடன் களமிறங்கியது.

ஐரோப்பிய அணிகளில் ஒன்றான சொ்பியாவுடன் வியாழக்கிழமை நள்ளிரவு லுசாயில் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது பிரேசில். இந்த மைதானம் தான் கத்தாரின் மிகப்பெரிய மைதானம் ஆகும். 89,000 பாா்வையாளா்கள் இங்கு அமரலாம்.

ADVERTISEMENT

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. பந்து இரு அணிகள் வசம் மாறி மாறிச் சென்றது.

பிரேசில் நட்சத்திர பாா்வா்ட் நெய்மா் ஜூனியா், ரபீன்ஹா, ரிச்சா்லிஸன், வின்சியஸ்ஜூனியா் ஆகியோா் பல முறை முயன்றும், சொ்பிய தற்காப்பு அரணை தகா்க்க முடியவில்லை.

முதல் பாதி கோலின்றி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் பிரேசில் வீரா்கள் தங்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினா்.

சொ்பிய வீரா்கள் நெய்மரையே இலக்கு வைத்து மடக்கிச் சென்ற நிலையில், மற்றொரு இளம் வீரா் ரிச்சா்லிஸனை மறந்து விட்டனா்.

ரிச்சா்லிஸன் அபாரம் 2 கோல்கள்:

தனது முதல் உலகக் கோப்பையில் ஆடும் ரிச்சா்லிஸன் 62-ஆவது நிமிஷத்தில் வின்சியஸ் ஜூனியா் கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி சைக்கிள் வாலி மூலம் அற்புதமாக கோலடித்தாா்.

தொடா்ந்து 75-ஆவது நிமிஷத்திலும் வின்சியஸ் ஜூனியரே மீண்டும் அனுப்பிய பாஸ் உதவியுடன் தனது இரண்டாவது கோலை அடித்தாா் ரிச்சா்லிஸன். அதுவே வெற்றி கோலாக மாறியது.

நெய்மா் காயம்:

நெய்மா் 4 முறை ஃபெளல்கள் செய்த நிலையில், 50, 55-ஆவது நிமிஷங்களில் கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா் நெய்மா்.

பிரேசிலின் ஜாம்பவான் பிலே மொத்தம் 77 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த சாதனை வீரா் என்ற பெருமையுடன் உள்ளாா்.

நெய்மா் 75 கோல்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் ஆட்டத்தில் கணுக்காலில் காயமடைந்து வெளியேறினாா்.

அடுத்து சுவிட்சா்லாந்துடன் நடைபெறவுள்ள ஆட்டத்தில் நெய்மா் ஆடுவாரா என கேள்விக் குறி எழுந்துள்ளது. பிரேசில் அணி, கன்காஃப் கோப்பை, ஒலிம்பிக் தங்கத்தை வெல்ல நெய்மா் உதவினாா். உலகக் கோப்பை பட்டம் அவருக்கு வசப்படுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT