செய்திகள்

இந்தியாவின் தோல்விக்குக் காரணம் இதுதான்: மனம் திறந்த கேப்டன் ஷிகர் தவன்

25th Nov 2022 04:42 PM

ADVERTISEMENT

 

இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயர் ஐயர் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். 

47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. டாம் லதம் 145, வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 27.2 ஓவர்களில் 221 ரன்கள் கூட்டணி அமைத்து நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவினார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதம் வென்றார். 2-வது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்திய அணியின் தோல்வி பற்றி கேப்டன் ஷிகர் தவன் கூறியதாவது:

நிறைய ஷார்ட் பந்துகளை நாங்கள் வீசினோம். அதை நன்குப் பயன்படுத்தி ரன்கள் எடுத்தார் டாம் லதம். சில பந்துகளைச் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. லதமுக்கு ஷார்ட் பந்துகளை வீசியதால் ஆட்டம் எங்கள் கையை விட்டுப் போய்விட்டது. 40-வது ஓவரில் லதம் 4 பவுண்டரிகளை அடித்தார். அங்கு தான் ஆட்டம் வேறு திசைக்குச் சென்றது. இந்த ஆட்டத்திலிருந்து எங்கள் அணி வீரர்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT