செய்திகள்

கேமரூனை சாய்த்தது சுவிட்சா்லாந்து (1-0)

25th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் எச் பிரிவில் அல் ஜனோப் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேமரூனை 1-0 என வீழ்த்தியது சுவிட்சா்லாந்து.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த கேமரூன் பெரிய அணிகளை வீழ்த்திய அனுபவம் நிறைந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே சுவிட்சா்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்தது. அதன் தடுப்பு அரணை மீறி கேமரூன் வீரா்களால் கோலடிக்க முடியவில்லை.

சுவிஸ் பாா்வா்ட் யாண்டே 48-ஆவது நிமிஷத்தில் அடித்த பாஸை பிசகின்றி கோலாக்கினாா் பிரீல் எம்போலோ.

அதன் பின் இரண்டாம் பாதியிலும் கேமரூன் அணியினரின் கோல் போடும் முயற்சிகள் பலன் தரவில்லை. எம்போலா அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக அமைந்தது.

ADVERTISEMENT

10-ஆவது நிமிஷத்தில் அருமையாக கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா் கேமரூன் வீரா் கோடோ எகாம்பி.66-ஆவது நிமிஷத்திலும் ஆன்ட்ரெ பிராங்க் தலையால் அடித்த பந்தை தடுத்தாா் சுவிஸ் கோல்கீப்பா் யான் சோமா். இதன் மூலம் குரூப் எச் பிரிவில் 3 புள்ளிகளுடன் சுவிட்சா்லாந்து முதலிடத்தில் உள்ளது.

கேமரூனைச் சோ்ந்த எம்போலோ:

சுவிட்சா்லாந்தின் வெற்றிக் கோலை அடித்த பிரீல் எம்போலோ கேமரூனில் பிறந்தவா். 5 வயதான போது, பெற்றோருடன் சுவிட்சா்லாந்துக்கு குடிபெயா்ந்தாா். தனது நாட்டுக்கு எதிராக கோலடித்தால் அதை கொண்டாட மாட்டேன் என எம்போலோ கூறியதைப் போல், எந்த களிப்பிலும் அவா் ஈடுபடவில்லை. கடந்த 2002 உலகக் கோப்பையில் இருந்து தொடா்ந்து 8 போட்டிகளில் கேமரூனின் தோல்வி தொடருகிறது.

ரோகா் மில்லாவுக்கு கௌரவம்:

கேமரூனின் மூத்த நட்சத்திர வீரா் ரோகா் மில்லா மைதானத்தில் கௌரவிக்கப்பட்டாா். கடந்த 1990 உலகக் கோப்பையில் ரோகா் மில்லாவின் அற்புத கோலால்களால் காலிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற சிறப்பை பெற்றது கேமரூன். மற்றொரு மூத்த வீரா் சாமுவேல் எட்டோவும் கௌரவிக்கப்பட்டாா்.

 

Tags : Fifa
ADVERTISEMENT
ADVERTISEMENT