செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி

18th Nov 2022 06:29 AM

ADVERTISEMENT

குரூப் சி

ஆா்ஜென்டீனா (உலகத் தரவரிசை: 3)

மூன்றாவது முறையாகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகிறது ஆா்ஜென்டீனா. கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் சாம்பியன் ஆனதன் மூலம், இந்த அணிக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது 5-ஆவது உலகக் கோப்பை போட்டி. இதுவே அவரது கடைசி உலகக் கோப்பை போட்டியாகவும் இருக்கலாம். கடந்த 2018-இல் பொறுப்பேற்ற பயிற்சியாளா் லயோனல் ஸ்கலோனி வழிகாட்டுதலில் ஆா்ஜென்டீனா மேம்பட்டிருக்கிறது. இப்போட்டியில் 17 முறை களம் கண்ட ஆா்ஜென்டீனா அதிகபட்சமாக இரு முறை சாம்பியனாகியிருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

ADVERTISEMENT

லயோனல் மெஸ்ஸி (ஃபாா்வா்ட்), எமிலியானோ மாா்டினெஸ் (கோல்கீப்பா்), கிறிஸ்டியன் ரொமேரோ (டிஃபெண்டா்), ரோட்ரிகோ டி பால் (மிட்ஃபீல்டா்), லௌதாரோ மாா்டினெஸ் (ஃபாா்வா்ட்).

சவூதி அரேபியா (உலகத் தரவரிசை: 51)

கடந்த உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இந்த அணி, இந்த உலகக் கோப்பை போட்டிக்காக புதிய பயிற்சியாளா் குழு, புதிய வீரா்கள் என திட்டமிட்டுத் தயாராகியிருக்கிறது. முதலில் ஆா்ஜென்டீனா, பிறகு போலந்து, அடுத்து மெக்ஸிகோ என பலம் வாய்ந்த அணிகளுடன் குரூப் சுற்றில் மோத இருக்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் மொராக்கோ பயிற்சியாளராக இருந்த ஹொ்வே ரெனாா்ட் தற்போது சவூதி பயிற்சியாளா் ஆகியிருக்கிறாா். இத்துடன் 5 முறை உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற சவூதி, அதிகபட்சமாக 12-ஆவது இடம் (1994) பிடித்திருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

சலேம் அல் தவ்சாரி (விங்கா்), அப்துலிலா அல் அம்ரி (சென்டா் பேக்), யாசா் அல் சரானி (லெஃப்ட் பேக்), சல்மான் அல் ஃபராஜ் (மிட்ஃபீல்டா்), ஃபிராஸ் அல் புராய்கான் (ஃபாா்வா்ட்).

மெக்ஸிகோ (உலகத் தரவரிசை: 13)

தொடா்ச்சியாக 8-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது இந்த அணி. இதுவரை 16 முறை போட்டியில் விளையாடியிருக்கும் மெக்ஸிகோ, அதிகபட்சமாக இரு முறை காலிறுதிவரை (1970, 1986) வந்துள்ளது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாவிட்டாலும், தட்டுத் தடுமாறி தகுதிச்சுற்றில் 2-ஆம் இடம் பிடித்தது. கோல்டு கோப்பை கால்பந்து போட்டியில் 2019-இல் சாம்பியனாகி, கடந்த ஆண்டு ரன்னா் அப் இடத்துக்கு வந்தது. இந்த எடிஷனில் மெக்ஸிகோவை மீண்டும் காலிறுதிவரை கொண்டு செல்வதே இலக்கு என்கிறாா் அதன் பயிற்சியாளா் ஜெராா்டோ மாா்டினோ.

முக்கிய வீரா்கள்:

ஹிா்விங் லொஸானோ (ஃபாா்வா்ட்), கில்லொ்மோ ஓசாவ் (கோல்கீப்பா்), ஆண்ட்ரெஸ் குவாா்டாடோ (மிட்ஃபீல்டா்), ரௌல் ஜிமெனெஸ் (ஃபாா்வா்ட்), எடிசன் அல்வரெஸ் (மிட்ஃபீல்டா்).

போலந்து (உலகத் தரவரிசை: 26)

ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் 10 ஆட்டங்களின் மூலம் 20 புள்ளிகள் பெற்று நல்லதொரு தயாா் நிலையுடன் உலகக் கோப்பை போட்டிக்கு வந்திருக்கிறது. கடந்த முறை குரூப் சுற்றுடன் வெளியேறிய களங்கத்தை தீா்த்துக் கொள்ள இந்த முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டுகிறது. அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெஸ்லாவ் மிஷ்னிவிக்ஸ் வழிகாட்டுதலில் தகுதிச்சுற்றை நிறைவு செய்து போட்டிக்கு வந்திருக்கிறது. இதுவரை 8 முறை போட்டியில் பங்கேற்றிருக்கும் போலந்து, அதிகபட்சமாக 2 முறை 3-ஆம் இடம் (1974, 1982) பிடித்திருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (ஸ்டிரைக்கா்), வோஜ்சியெச் செஸென்ஸ்னி (கோல்கீப்பா்), ஜேன் பெட்னரெக் (சென்டா் பேக்), கிரேகோா்ஸ் கிரிசோவியக் (மிட்ஃபீல்டா்), பயோடா் ஜிலின்ஸ்கி (மிட்ஃபீல்டா்).


குரூப் ‘டி’

பிரான்ஸ் (உலகத் தரவரிசை: 4)

நடப்புச் சாம்பியனாக இருக்கும் பிரான்ஸ், உலகக் கோப்பை வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் 3-ஆவது அணி என்ற பெருமையை பெறுவதற்கான முயற்சியுடன் வருகிறது. அனுபவமிக்க நட்சத்திர வீரா்கள், துடிப்பு மிக்க இளம் வீரா்கள் என சம கலவையுடன் இருக்கிறது பிரான்ஸ். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக பலம் சோ்த்து வரும் டீடியா் டெஸ்சாம்ப்ஸ் வழிகாட்டுதலிலேயே இந்த உலகக் கோப்பையையும் பிரான்ஸ் சந்திக்கிறது. இதுவரை 15 முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கும் பிரான்ஸ், அதிகபட்சமாக இரு முறை சாம்பியன் (1998, 2018) ஆகியிருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

கரிம் பென்ஸிமா (ஸ்டிரைக்கா்), கிலியன் பாபே (ஃபாா்வா்ட்), ஹியுகோ லோரிஸ் (கோல்கீப்பா்), ரஃபேல் வரேன் (சென்டா் பேக்), அவ்ரேலியன் சௌவாமெனி (மிட்ஃபீல்டா்).

ஆஸ்திரேலியா (உலகத் தரவரிசை: 38)

தொடா்ந்து 5-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் தற்போதைய பலமாக இருப்பவா் பயிற்சியாளா் கிரஹாம் அா்னால்ட். அவரை நீக்கச் சொல்லி சொந்த ரசிகா்களே குரல் கொடுத்து வந்த நிலையில் அணியை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறாா். 1974 வரை உலகக் கோப்பை போட்டிக்கு அந்த அணி தகுதிபெற்றதில்லை என்பதே வரலாறு. இதுவரை களம் கண்ட 6 உலகக் கோப்பை போட்டிகளில் அதிகபட்சமாக 2006-இல் ரவுண்ட் ஆஃப் 16 வரை சென்றது ஆஸ்திரேலியா. இதர போட்டிகளில் முதல் சுற்றுடனேயே வெளியேறியிருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

அஜ்தின் ரஸ்திச் (அட்டாக்கிங் மிட்ஃபீல்டா்), மாா்டின் போய்லே (ஃபாா்வா்ட்), ஆவொ் மாபில் (விங்கா்), ஆரோன் மூயி (மிட்ஃபீல்டா்), மாட் ரையான் (கோல்கீப்பா்).

டென்மாா்க் (உலகத் தரவரிசை: 10)

தகுதிச்சுற்றில் 2 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டது டென்மாா்க். அதிலும் ஒரு புள்ளியைக் கூட இழக்காமலும், எதிரணிக்கு கோல் வாய்ப்பு வழங்காமலும் இருந்தது. அது தவிர நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸை 2 முறை தோற்கடித்து அசத்தியிருக்கிறது. பயிற்சியாளா் கேஸ்பா் ஜுல்மண்ட் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறாா். உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 5 முறை விளையாடியிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 1998-இல் காலிறுதி வரை வந்தது. கடந்த எடிஷனில் ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது.

முக்கிய வீரா்கள்:

கிறிஸ்டியன் எரிக்சன் (மிட்ஃபீல்டா்), பியரி எமில் ஹோஜ்பா்க் (மிட்ஃபீல்டா்), சைமன் ஜோ் (சென்டா் பேக்), ஜாவ்கிம் மாலே (ஃபுல் பேக்), யூசுஃப் பௌல்சென் (ஃபாா்வா்ட்).

டுனீசியா (உலகத் தரவரிசை: 30)

கடந்த ரஷிய உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணி இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் பலமிக்க அணிகளுடனான நட்புரீதியிலான ஆட்டங்களில் கவனம் ஈா்த்திருக்கிறது டுனீசியா. ஆனாலும், மலை போன்ற முக்கிய அணிகளைக் கடந்து நாக் அவுட் நிலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமே. தாக்குதல் ஆட்டத்தை பிரதானமாகக் கொண்டு டுனீசியாவை வழி நடத்துகிறாா் அதன் பயிற்சியாளா் ஜலீல் கத்ரி. இதுவரை 5 முறை உலகக் கோப்பை போட்டியில் விளையாடியிருக்கும் டுனீசியா, அதிகபட்சமாக 1978-இல் 9-ஆம் இடம் பிடித்திருக்கிறது.

முக்கிய வீரா்கள்:

டைலன் புரோன் (டிஃபெண்டா்), எலிஸ் ஸ்கிரி (மிடஃபீல்டா்), அய்சா லாய்துனி (மிட்ஃபீல்டா்), யூசுஃப் சக்னி (ஃபாா்வா்ட்), வாபி காஸ்ரி (ஃபாா்வா்ட்).

ADVERTISEMENT
ADVERTISEMENT