செய்திகள்

பாலியல் புகார்: இலங்கை வீரருக்குப் பிணை வழங்கிய ஆஸி. நீதிமன்றம்

17th Nov 2022 11:43 AM

ADVERTISEMENT

 

பாலியல் புகார் காரணமாகக் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஆஸி. நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது இலங்கை அணியின் வீரா் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பாகக் கடந்த நவம்பர் 6 அன்று சிட்னி காவல்துறையினர் கைது செய்தனா். கடந்த 2-ம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா மீது புகாா் எழுந்தது. சமூகவலைத்தளம் மூலம் அப்பெண்ணுடன் தனுஷ்கா குணதிலகா தொடா்பு கொண்டாா் எனக் காவல்துறை கூறியது. இங்கிலாந்திடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இன்றி நாடு திரும்பியது. நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டான தனுஷ்கா காயமடைந்ததால் அடுத்த ஆட்டங்களில் இடம் பெறவில்லை. எனினும் அவர் மாற்று வீரராக அணியில் தொடர்ந்து இடம்பெற்றார். 

பாலியல் புகாா் காரணமாக தனுஷ்கா குணதிலகா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளுக்காக மூன்று முறை  அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். தற்போது மீண்டும் அவருக்குத் தடை விதித்துள்ளது. 

ADVERTISEMENT

தீவிரமான குற்றச்சாட்டுகள் காரணமாக தனுஷ்கா குணதிலகாவுக்குப் பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் முதலில் மறுத்தது. இந்நிலையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர் காப்புத்தொகையுடன் தனுஷ்கா குணதிலகாவுக்குத் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் டேட்டிங் தொடர்புடைய சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கா தன்னுடைய பாஸ்போர்ட்டைக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதால் அவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடியாது, வேறு எங்கும் தப்பிச் செல்ல முடியாது. எனவே பிணை வழங்க வேண்டும் என்கிற தனுஷ்கா தரப்பின் வாதத்தை சிட்னி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பிணை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட முகவரியில் தனுஷ்கா தங்கியிருக்க வேண்டும், தினமும் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணிக்காக தனுஷ்கா குணதிலகா 8 டெஸ்ட், 47 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT