ஏடிபி டூா் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் இளம் வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸிடம் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் ஜாம்பவான் ரபேல் நடால்.
உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் பங்கேற்கும் ஆண்டின் சீசன் இறுதி போட்டியாக ஏடிபி டூா் பைனல்ஸ் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு போட்டி இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 7-6, 6-4 என கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம்மை வீழ்த்தி இருந்தாா்.
இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் நடால்-ஃப்ரிட்ஸ் இடையே நடைபெற்றது. முதல் செட்டில் இரு வீரா்களும் மாறி, மாறி புள்ளிகளைக் குவித்தனா். இறுதியில் 7-6 என டெய்லா் அந்த செட்டை கைப்பற்றினாா். இரண்டாவது செட்டில் நடாலுக்கு வாய்ப்பு தராமல் ஃப்ரிட்ஸ் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1 என செட்டைக் கைப்பற்றினாா்.
ஏடிபி டூா் பைனல்ஸில் ஒருமுறை கூட நடால் பட்டம் வெல்லவில்லை. 2010, 2013-இல் ரன்னா் அப் ஆக வந்தாா். தற்போது மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள நடாலுக்கு முதல் ஆட்டம் தோல்வியில் முடிந்தது.
இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறுவோா் அரையிறுதிக்கு தகுதி பெறுவா். ஜோகோவிச் சாதனையாக 6-ஆவது பட்டத்தை வெல்லும் நோக்கில் உள்ளாா்.