செய்திகள்

கடந்த வருடம் இதே நாளில்: டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

14th Nov 2022 05:48 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

கடந்த வருடம் இதே நாளில் ஆஸ்திரேலிய அணி 2021 டி20 உலகக் கோப்பையை வென்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். எதிர்பார்த்தது போலவே இலக்கை வெற்றிகரமாக விரட்டி டி20 உலக சாம்பியனது ஆனது ஆஸ்திரேலியா. 

ADVERTISEMENT

மே 2020. டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நெ.1 அணி. முதல்முறையாக. 

அக்டோபர் 2021. டி20 தரவரிசையில் 7-ம் இடம்.

நவம்பர் 14. உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வி அடைந்த ஆஸி. அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது எப்படி? 

நெ. 1 இடத்துக்கு வந்த பிறகுதான் தடுமாற்றம் ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, மே.இ. தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளிடம் தோற்றது ஆஸ்திரேலிய அணி. சொந்த மண்ணிலும் இந்தியாவிடம் தோற்றது. தொடர்ந்து 5 டி20 தொடர்களில் தோல்வி. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு கடைசியாக விளையாடிய 21 ஆட்டங்களில் 6-ல் தான் வெற்றி. டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணியின் நிலைமை மேலும் மோசமாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸி. டி20 அணியின் சறுக்கல்களுக்குச் சில காரணங்களும் உண்டு. 2020 செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது தான் அனைத்து முக்கிய ஆஸி. வீரர்களும் டி20 தொடரில் இடம்பெற்றார்கள். அதன்பிறகு பல தொடர்களில் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. 4 தொடர்களில் வார்னர், கம்மின்ஸ் விளையாடவில்லை. 3-ல் ஸ்மித் விளையாடவில்லை. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் கடைசி இரு தொடர்களில் பங்கேற்கவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தான் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரும் முதல்முறையாக டி20 ஆட்டத்தில் ஒன்றாக விளையாடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே 5 டி20 தொடர்களில் தோற்றதற்கு முக்கிய வீரர்கள் அணியில் பங்கேற்காததை முக்கியக் காரணமாகச் சொல்லலாம். 

2019-20-ல் நெ.1 அணியாக இருந்தபோது 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி அந்த உயரத்தை ஆஸி. அணி எட்டியது. ஆனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் திட்டத்தை மாற்றினார் கேப்டன் ஃபிஞ்ச். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏழு பேட்டர்கள், 4 பிரதான பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் களமிறங்குகிறோம். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மார்ஷ் ஆகிய மூவரும் இணைந்து நான்கு ஓவர்களை வீசி முடிப்பார்கள் என்று போட்டி ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் மேக்ஸ்வெல் 3 ஓவர்களையும் மார்ஷ் 1 ஓவரையும் வீசினார்கள். இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து பெரிய பாதிப்பில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இறுதிச்சுற்றில் மேக்ஸ்வெல் 3 ஓவர்களையும் மிட்செல் மார்ஷ் ஒரு ஓவரையும் வீசினார்கள். இதுபோன்ற சரியான திட்டமிடல்களுடன்தான் உலகக் கோப்பையில் ஆஸி. அணி விளையாடி வென்றது. 

ஃபார்மில் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியை ஆட வந்த வார்னர், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் பிடித்து அசத்தினார். 7 ஆட்டங்களில் 289 ரன்கள். ஸ்டிரைக் ரேட் -  146.70. இதனால் ஆஸி. அணியின் பெரிய சிக்கல் தீர்ந்தது.

ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் தான் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. நான்கு முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2010-ல் 2-ம் இடம். 

இந்தமுறை அரையிறுதிக்குத் தகுதியடையாமல் போனாலும் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸி. வீரர்களும் ரசிகர்களும் மட்டுமல்ல இதர நாட்டு கிரிக்கெட் வீரர்களும் மறக்க மாட்டார்கள். உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு எப்படி விளையாடினோம் என்பது முக்கியமல்ல, உலகக் கோப்பைப் போட்டியில் எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிற பாடத்தை அனைவரும் கற்றுக்கொடுத்தது ஆஸ்திரேலிய அணி.  

உதாரணமாக இந்த வருடம் முதலில் விளையாடிய மூன்று டி20 தொடர்களிலும் இங்கிலாந்து தோற்றது. மேற்கிந்தியத் தீவுகளில் 2-3 எனவும் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 1-2 எனவும் தென்னாப்பிரிக்காவிடம் 1-2 எனவும் வரிசையாகத் தோற்றது. அப்போது யாராவது இந்த இங்கிலாந்து அணி தான் அடுத்த டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தால் யார் நம்பியிருப்பார்கள்? ஆனால் ஆஸ்திரேலியாவின் வெற்றி ரகசியத்தை அறிந்தவர்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்காது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT