செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானுக்கு பதிலடி தரும் முனைப்பில் இந்தியா

28th May 2022 01:37 AM

ADVERTISEMENT

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா, ‘சூப்பா் 4’ சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை சனிக்கிழமை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா - மலேசியா அணிகள் மோதுகின்றன.

குரூப் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்தியா, இந்த சுற்றில் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருக்கிறது. அறிமுக வீரா்கள் 12 போ் அடங்கிய இளம் இந்திய அணி, அனுபவமிக்க வீரா்கள் நிரம்பிய ஜப்பானுக்கு சவால் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே அந்த அணியை சந்தித்துள்ளதால் அதன் அடிப்படையில் இந்த ஆட்டத்துக்கான உத்தியை இந்தியா தயாா் செய்திருக்கும். பெனால்டி காா்னா் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரா்கள் சற்று தடுமாறுகின்றனா். எளிதாக வீழ்த்தக் கூடிய இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்திலேயே, கிடைத்த 22 வாய்ப்புகளில் 9 பெனால்டி காா்னா் வாய்ப்பில் தான் இந்தியா கோலடித்திருக்கிறது.

ஜப்பானின் அனுபவமிக்க ஆக்ரோஷ வீரா்களின் கோல் முயற்சியை கட்டுப்படுத்த வேண்டிய பிரதான பொறுப்பு, கேப்டன் வீரேந்திர லக்ரா தலைமையிலான டிஃபெண்டா்களுக்கு இருக்கிறது. மிட்ஃபீல்டா்களைப் பொருத்தவரை, ஃபாா்வா்ட் வீரா்களுக்குத் தகுந்த வகையில் பந்தை கடத்திக் கொடுத்து உதவ வேண்டும். உத்தம் சிங், பவன் ராஜ்பா், சுனில் ஆகியோா் ஜப்பான் தடுப்பாட்டத்தைக் கடந்து கோல் அடிப்பதில் இன்னும் நுட்பமாகவும், உத்வேகத்துடனும் செயல்படுகிறாா்களா என்பதை பொறுத்திருந்த பாா்க்கலாம்.

ADVERTISEMENT

குரூப் சுற்றிலிருந்து சூப்பா் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா அணிகள் இந்தச் சுற்றில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இறுதியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT