செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியாவை வென்றது ஜப்பான்

25th May 2022 03:25 AM

ADVERTISEMENT


ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வியைத் தழுவியது. 
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்து, தற்போது தோல்வி கண்டதால், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை எனத் தெரிகிறது. 
ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக பவன் ராஜ்பர் (44'), உத்தம் சிங் (49') ஆகியோர் கோலடிக்க, ஜப்பான் தரப்பில் கென் நாகயோஷி (23'), கொசெய் கவாபே (39', 55'), ரியோமா ஊகா (48'), கோஜி யமாசகி (53') ஆகியோர் ஸ்கோர் செய்தனர். 
இளம் வீரர்களை அதிகமாகக் கொண்டிருந்த இந்திய அணியால், அனுபவமிக்க வீரர்களைக் கொண்டு கட்டுக்கோப்புடன் விளையாடிய ஜப்பானுக்கு சவால் அளிக்க முடியாமல் போனது. 
இதர ஆட்டங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் வங்கதேசம் - ஓமனையும் (2-1), பாகிஸ்தான் - இந்தோனேசியாவையும் (13-0), மலேசியா - தென் கொரியாவையும் (5-4) வென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT