செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்: இந்த வாரம் அறிவிக்கும் ஈசிபி

DIN

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் தேர்வாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் சமீபத்தில் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கும் ஜோ ரூட்டுக்கும் பெரிய சிக்கலாக அமைந்தது. கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்தில் அதாவது 9-ம் இடத்தில் உள்ளது. விளையாடிய 11 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்தார். கடைசியில் வேறுவழியின்றி ராஜிநாமா செய்துவிட்டார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) புதிய நிர்வாக இயக்குநர் ராப் கீ பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வானார். 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவியைப் பறித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இம்முறை டெஸ்ட், வெள்ளைப் பந்து கிரிக்கெட் என இரண்டு தனித்தனி பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதையடுத்து நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் முடிவில், முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்படவுள்ளார் என இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வார இறுதிக்குள் தனது முடிவை ஈசிபி அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT