செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: மே.இ. தீவுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நன்மை செய்த பாகிஸ்தான் அணி

21st Mar 2022 03:08 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

மே.இ. தீவுகள் அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. டாட்டின் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நிடா டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

எளிதான இலக்கை நன்கு விரட்டிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் 2009-க்குப் பிறகு 18 தோல்விகளைத் தொடர்ச்சியாக அடைந்து, தற்போது முதல் வெற்றியை அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. 

புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கடைசி இடத்திலும் மே.இ. தீவுகள் அணி 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. இதனால் இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ள இந்தியாவும் இங்கிலாந்தும் மே.இ. தீவுகளைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT