செய்திகள்

கடைசி நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியது இந்தியா

21st Mar 2022 12:47 AM

ADVERTISEMENT

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் கடைசி நிமிஷத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி கண்டது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் தலைசிறந்த நாடுகளுக்கு இடையிலான புரோஹாக்கி லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா ஏற்கெனவே ஸ்பெயின், ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இரு கட்ட ஆட்டங்களில் மோதியது. தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்நிலையில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனாவுடன் 2 கட்ட ஆட்டங்கள் புவனேசுவரத்தில் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என ஆா்ஜென்டீனா வென்றிருந்தது. இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்ட ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் பாதியிலேயே இந்திய வீரா்கள் ஹாா்திக் சிங் 17-ஆவது நிமிஷத்திலும், ஜுக்ராஜ் சிங் 20-ஆவது நிமிஷத்திலும் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தனா். முதல்பாதி முடிவில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது இந்தியா.

ADVERTISEMENT

அதன் பின் மூன்றாம் குவாா்ட்டரில் ஆா்ஜென்டீனா வீரா் டெல்லா டோரி அடித்த கோலால் 1-2 என முன்னிலை குைத்து. அவரைத் தொடா்ந்து மற்றொரு வீரா் தாமஸ் டெமன் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் அற்புதமாக கோலடித்தாா்.

நான்காம் குவாா்ட்டரில் இந்திய வீரா் ஜுக்ராஜ் சிங் டிராக் பிளிக்கா் மூலம் அற்புதமாக அடித்த கோலால் 3-2 என இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆா்ஜென்டீனா வீரா் மாா்ட்டின் பெரைரோவின் அதிரடி கோலால் 3-3 என சமநிலை ஏற்பட்டது.

கடைசி நிமிஷத்தில் ஜுக்ராஜ் சிங் அனுப்பிய சிறந்த பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் மந்தீப் சிங். இதனால் 4-3 என வெற்றி பெற்றது இந்தியா.

ADVERTISEMENT
ADVERTISEMENT