செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு 3-வது தோல்வி

14th Mar 2022 03:32 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது.  

மவுண்ட் மாங்கனூயி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை டமி பியூமாண்ட் 62 ரன்களும் விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் 53 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியின் மரிஸேன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பைப் போட்டியில் தெ.ஆ. அணியின் சிறந்த பந்துவீச்சு இது. 

இந்த ஸ்கோரைக் கவனமாக விரட்டி கடைசி ஓவரில் வெற்றியடைந்தது தென்னாப்பிரிக்கா. பரபரப்பாக முடிந்த ஆட்டத்தில் 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை லாரா 77 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். 

ADVERTISEMENT

2000-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இங்கிலாந்தை உலகக் கோப்பைப் போட்டியில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. மேலும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆடவர், மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்தவொரு நடப்பு சாம்பியனும் முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததில்லை. 

இன்று நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானை வீழ்த்தி முதல் உலகக் கோப்பை வெற்றியை அடைந்தது வங்கதேசம். அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தென்னாப்பிரிக்கா. 

Tags : world cup
ADVERTISEMENT
ADVERTISEMENT