செய்திகள்

மார்கனின் ஓய்வு இங்கிலாந்து அணியைப் பாதிக்கும்: ஆர்ச்சர்

30th Jun 2022 01:54 PM

ADVERTISEMENT

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இயன் மார்கன் ஓய்வு பெற்றிருப்பது இங்கிலாந்து அணியைப் பாதிக்கும் என ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாயன்று, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் இயன் மார்கன். ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் தலைசிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்வதற்கு முக்கியப் பங்களித்த மார்கனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து ஊடகத்தில் மார்கன் பற்றி அவர் தெரிவித்ததாவது:

மார்கனின் ஓய்வு அறிவிப்பு நான் எதிர்பாராதது. உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் பெரிதாகப் பங்களிக்க முடியாததால் அணியிலிருந்து விலகுவது இதுவே சரியான நேரம் என அவர் நினைத்துள்ளார். நான் அப்படி நினைக்கவில்லை. மற்றவர்களும். 

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் மார்கன் அணியில் இருந்து, அவர் ஒரு ரன்னும் எடுக்காமல் போனாலும் அது முக்கியமில்லை. அவர் அணியினருடன் இல்லாதது நிச்சயம் பாதிக்கும். அணியில் அவருடைய பொறுப்பு என்பது பேட்டிங்குக்கும் மேலானது. மற்ற வீரர்கள் நன்கு விளையாட அவர் ஊக்கமளிப்பவர். அந்த சக்தி எல்லோருக்கும் இருப்பதில்லை. மார்கனைப் போல அணியில் தாக்கம் ஏற்படுத்தும் இன்னொருவர், பென் ஸ்டோக்ஸ். எல்லோரும் தனிப்பட்ட முறையில் அணிக்குப் பங்களிக்க விரும்புவார்கள். ஆனால் தனது தலைமைப் பண்பின் மூலமாக அணியினருக்குப் பெரிய ஊக்கமாக இருப்பவர் மார்கன் எனக் கூறியுள்ளார். 

கடந்த 15 மாதங்களில் மூன்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சருக்குக் கடந்த மாதம் மீண்டும் காயம் ஏற்பட்டதால் செப்டம்பர் வரை மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tags : Morgan archer
ADVERTISEMENT
ADVERTISEMENT