செய்திகள்

2-வது டி20: இந்தியா த்ரில் வெற்றி

29th Jun 2022 01:28 AM

ADVERTISEMENT

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வ்து டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 104 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது அயர்லாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்ட்ரிலிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிரினி களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 60 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய பால் இந்த இணையை ரவி பிஷ்னோய் தனது சுழலில் விழ வைத்தார். பால் ஸ்டிரிலிங் 40 ரன்களில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேரத் டெலானி வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர்,கேப்டன் ஆண்ட்ரூவுடன் ஜோடி சேர்ந்தார் ஹாரி டெக்டார். இந்த இணை சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்ததன் மூலம் அணியின் ரன் ரேட் சரியான வேகத்தில் பயணித்தது. அதிரடியாக ஆடிய ஆண்ட்ரூ அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில், 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். ஹாரி டெக்டார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் விக்கெட் கீப்பர் லார்கேன் டக்கர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அயர்லாந்துக்கு சிக்கல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த தருணத்தில் ஜியார்ஜ் டாக்ரெல் மற்றும் மார்க் இணை அயர்லாந்தின் வெற்றிக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இந்த இணை சிறப்பாக விளையாட அயர்லாந்து அணியின் ரன் ரேட் சீராக வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்தது.  கடைசி இரண்டு ஓவர்களில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 30 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டது. இந்த நிலையில் ஹர்ஷல் படேல் வீசிய 19 ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இறுதி ஓவரில் அந்த அணிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இறுதி ஓவரை உம்ரான் மாலிக் வீச வந்தார். இறுதி ஒவரின் இரண்டாவது பந்தை அவர் நோபாலாக வீசினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அயர்லாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி இரண்டு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டன. சிறப்பாக பந்து வீசிய உம்ரான் மாலிக் கடைசி இரு பந்துகளில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய தரப்பில் புவனேஷ்குமார், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT