செய்திகள்

இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஓய்வு!

28th Jun 2022 08:55 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மார்கன் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மார்கன் (35) இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2019-இல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்.

ADVERTISEMENT

2010-இல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்றபோது அதிலும் விளையாடியிருந்தார் மார்கன்.

7 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த மார்கன், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்தை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிக்கஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட்டில் யார் அதிக வெற்றி?

ஒருநாள் மற்றும் டி20யில் அதிக ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மார்கன் பெற்றுள்ளார். அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையிலும் மார்கனுக்கே முதலிடம்.

225 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 13 சதங்கள் உள்பட 6,957 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 39.75. 126 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள மார்கன் வெற்றி விகிதம் 60 சதவிகிதத்துடன் 76 ஆட்டங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

மார்கன், டி20 கிரிக்கெட்டில் 72 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற இந்தியாவின் மகேந்திர சிங் தோனியின் சாதனையை மார்கன் சமன் செய்துள்ளார். மொத்தம் 115 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 2,458 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இரண்டு சதம் அடித்துள்ளார்.

இயான் மார்கன், 2006 முதல் 2009 வரை அயர்லாந்து அணிக்காக 23 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவே பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடியுள்ளார் இயான் மார்கன். 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 2017-இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 2020-இல் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பிய மார்கன், அந்த சீசன் பாதியில் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்றார். 

இதுவரை மொத்தம் 83 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள இயான் மார்கன் 1,405 ரன்கள் எடுத்துள்ளார். 

Tags : Eoin Morgan
ADVERTISEMENT
ADVERTISEMENT