செய்திகள்

தீபக் ஹூடா சதம்: இந்தியா 227 ரன்கள் குவிப்பு

DIN


அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து, இந்தியா இடையிலான 2-வது டி20 ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்குப் பதில் சஞ்சு சாம்சன், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். கிஷன் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, சாம்சனுடன் இணைந்த தீபக் ஹூடா துரிதமாக ரன் சேர்த்தார். சாம்சனும் அவருடன் இணைந்து பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளேவுக்கு பிறகும் இந்த இணை அதிரடியை நீடித்தது. ஹூடா 27-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது.

அரைசதம் அடித்த பிறகு சதத்தை நோக்கி ஹூடா துரிதமாக நகரத் தொடங்கினார். அவர் 79 ரன்களை எட்டியபோது சஞ்சு சாம்சனும் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் முதல் அரைசதம் இது.

இதையடுத்து, இந்த இணை ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்த அயர்லாந்து வீரர்கள் செய்வதறியாது திணறினர். 15 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

இந்த இணை கடைசி நேர அதிரடிக்குத் தயாராகி 17-வது ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு சாம்சன், ஹூடா இணை 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் அதே ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார். 

ஹூடாவும் 55-வது பந்தில் சதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதத்தை எட்டும் 4-வது இந்திய வீரர் ஹூடா.

ஹூடா சதமடித்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹூடாவும் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஹூடா 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வீசப்பட்ட 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் மற்றும் அக்ஷர் படேல் முதல் பந்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹார்திக் பாண்டியா மட்டும் கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்தால். 3-வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால், 5-வது பந்தில் ஹர்ஷல் படேலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் புவனேஷ்வர் குமார் 1 ரன் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ்வா லிட்டில் மற்றும் கிரெய்க் யங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT