செய்திகள்

அயர்லாந்துடனான டி20 இந்தியாவுக்கு எளிதான வெற்றி

28th Jun 2022 05:39 AM

ADVERTISEMENT

அயர்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டம், மழை காரணமாக சுமார் 2.30 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஒரு அணிக்கான ஓவர்கள் 12-ஆகக் குறைக்கப்பட்டது. 

முதலில் ஆடிய அயர்லாந்து 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வென்றது. 

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். டாஸ் வென்ற இந்தியா பெüலிங்கைத் தேர்வு செய்தது. அயர்லாந்து இன்னிங்ஸில் பால் ஸ்டிர்லிங் 4, கேப்டன் ஆண்டி பால்பிர்னி 0, கேரத் டெலானி 8, லோர்கான் டக்கர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ADVERTISEMENT

ஓவர்கள் முடிவில் ஹேரி டெக்டார் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 64, ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். இந்திய பெüலர்களில் புவனேஷ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, அவேஷ் கான், யுஜவேந்திர சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

பின்னர் இந்திய இன்னிங்ஸில் இஷான் கிஷண் 26, சூர்யகுமார் யாதவ் 0, கேப்டன் ஹார்திக் பாண்டியா 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தீபக் ஹூடா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47, தினேஷ் கார்த்திக் 5 ரன்கள் சேர்த்து இறுதிவரை நிலைத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். அயர்லாந்து தரப்பில் கிரெய்க் யங் 2, ஜோஷ் லிட்டில் 1 விக்கெட் சாய்த்தனர். 

இன்று 2-ஆவது ஆட்டம்: இந்தியா - அயர்லாந்து மோதும் 2-ஆவது டி20 ஆட்டம் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT