செய்திகள்

டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து சாம்பியன்

28th Jun 2022 05:36 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது அந்த அணி.

கடைசி டெஸ்டில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 117.3 ஓவர்களில் 329 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பெளலிங்கில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 360 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 162 ரன்கள் விளாச, நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 105.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. டாம் பிளண்டெல் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 
இங்கிலாந்தின் ஜேக் லீச் மீண்டும் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியாக 296 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 54.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை எட்டியது. ஆலி போப் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 86, ஜானி பேர்ஸ்டோ 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.நியூஸிலாந்தின் டிம் செளதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT