செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20: இந்தியா தோல்வி

27th Jun 2022 05:43 PM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடர் தொடங்கியது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

டம்புல்லாவில் இன்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். ரோட்ரிகஸ் 33, மந்தனா 22 ரன்கள் எடுத்தார்கள். 

ADVERTISEMENT

இலங்கை அணியின் கேப்டன் சமரி அத்தபத்து அதிரடியாக விளையாடி ஆரம்பம் முதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். 29 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எடுத்ததால் அவரைக் கட்டுப்படுத்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார்கள். இறுதியில், 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை அடைந்தது இலங்கை அணி. மேலும் சொந்த மண்ணில் முதல்முறையாக டி20 ஆட்டத்தில் இந்தியாவை வென்றுள்ளது. கேப்டன் அத்தபத்து 48 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் அவர் வென்றார். 

இந்திய அணி டி20 தொடரை 2-1 என வென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வானார். 

ஒருநாள் தொடர் ஜூலை 1 முதல் தொடங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT