செய்திகள்

ஓய்வு பெறுகிறாரா இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன்?

27th Jun 2022 12:20 PM

ADVERTISEMENT

 

காயம் மற்றும் மோசமான பேட்டிங் போன்ற காரணங்களால் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், ஓய்வு அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2019-ல் இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கோப்பையை வென்றது. 35 வயது மார்கன் காயம் மற்றும் சரியாக விளையாடாத காரணங்களால் இந்த வருடம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இருமுறை டக் அவுட் ஆனார். 3-வது ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கடந்த 28 இன்னிங்ஸில் இரு அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவர் மீது விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து தலைமைப் பயிற்சியாளர் மேத்யூ மாட், இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநர் ராப் கீ ஆகியோர் மார்கனுக்கு ஆதரவுக்குரல் எழுப்பினாலும் தற்போதைய நிலைமையில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற மார்கன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து 2015 முதல் துணை கேப்டனாக உள்ள ஜாஸ் பட்லர், இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 13 முறை இங்கிலாந்து அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அல்லது மொயீன் அலி கேப்டனாகத் தேர்வாகவும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நெதர்லாந்து தொடருக்கு முன்பு அளித்த பேட்டியில், என்னால் அணிக்குச் சரியான முறையில் பங்களிக்க முடியாவிட்டால் விலகிவிடுவேன் என்றார் மார்கன். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகவே இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT