செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக..: மிட்செல் படைத்த புதிய சாதனை

25th Jun 2022 08:46 AM

ADVERTISEMENT


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய நியூசிலாந்து கிரிக்கெட் ஆல்-ரௌண்டர் டேரில் மிட்செல் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டேரில் மிட்செல் 228 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் மிட்செல் சதமடித்துள்ளார்.

இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் மிட்செல் படைத்துள்ளார்.

இந்தத் தொடரில் மொத்தம் 5 இன்னிங்ஸில் 482 ரன்கள் விளாசியுள்ளார் மிட்செல். பேட்டிங் சராசரி 120.5. ஒரு அரைசதம் மற்றும் 3 சதங்கள் விளாசியுள்ள மிட்செல்லின் அவரது அதிகபட்ச ஸ்கோர் 190.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்துக்கு சோகம் காத்திருந்தது. டிரென்ட் போல்ட் சிறப்பாகப் பந்துவீசி அலெக்ஸ் லீஸ், ஸாக் கிராலே மற்றும் ஆலி போப் ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்த ஜோ ரூட்டை டிம் சௌதி காலி செய்தார். இதன்பிறகு, நீல் வேக்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (18) மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகியோரை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.

இதனால், அந்த அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பிறகு, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்துக்கு நெருக்கடியைத் தந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பேர்ஸ்டோவ் சதம் விளாசினார், ஓவர்டன் அரைசதம் விளாசினார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. பேர்ஸ்டோவ் 130 ரன்களுடனும், ஓவர்டன் 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இன்னும் 65 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT