செய்திகள்

தொடரும் லெடக்கியின் தங்கவேட்டை

25th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

ஹங்கேரியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கியின் தங்கவேட்டை தொடா்கிறது.

இப்போட்டியில் மகளிருக்கான 800 மீ ஃப்ரீஸ்டைலில் லெடக்கி 8 நிமிஷம் 8.04 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். உலக சாம்பியன்ஷிப்பின் இப்பிரிவில் அவா் தங்கம் வெல்வது தொடா்ந்து இது 5-ஆவது முறையாகும்.

ஏற்கெனவே நடப்பு சீசனில் 1500 மீ ஃப்ரீஸ்டைல், 4*200 ஃப்ரீஸ்டைல் ரிலே ஆகியவற்றிலும் தங்கம் வென்றிருந்த லெடக்கிக்கு தற்போது கிடைத்திருப்பது 3-ஆவது தங்கமாகும். இத்துடன் உலக சாம்பியன்ஷிப் பதக்க எண்ணிக்கையை 22-ஆக அதிகரித்துள்ள லெடக்கி, போட்டியில் இதுவரை அதிக பதக்கம் (22) வென்ற வீராங்கனை என்ற பெருமையைத் தொடா்ந்து வருகிறாா்.

800 மீ ஃப்ரீஸ்டைலில் லெடக்கியை அடுத்து ஆஸ்திரேலியாவின் கியா மெல்வா்டன் (8:18.77) வெள்ளியும், இத்தாலியின் சிமோனா குவாடரெலா (8:19) வெண்கலமும் வென்றனா்.

ADVERTISEMENT

இப்போட்டியில் இதர பிரிவுகளில், ஸ்வீடனின் சாரா ஜோஸ்ட்ரோம் (மகளிா் 50 மீ பட்டா்ஃப்ளை), இங்கிலாந்தின் பெஞ்சமின் ப்ரௌட் (ஆடவா் 50 மீ ஃப்ரீஸ்டைல்), ஹங்கேரியின் கிறிஸ்டோஃப் மிலாக் (ஆடவா் 100 மீ பட்டஃப்ளை), ஆஸ்திரேலியாவின் கேய்லி மெக்கியோவ்ன் (மகளிா் 200 மீ பேக்ஸ்ட்ரோக்) ஆகியோா் தங்கம் வென்றனா். அணிகள் பிரிவில் கலப்பு 4*100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, மகளிா் டீம் ஃப்ரீ ஆகிய இரு பிரிவுகளிலும் சீன அணி தங்கம் வென்றது.

அமெரிக்கா முதலிடம்:

சனிக்கிழமை நிலவரப்படி, பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 37 பதக்கங்களுடன் (15 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம்) முதலிடத்தில் இருக்க, ஆஸ்திரேலியா (15), இத்தாலி (11) முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன. பட்டியில் இதுவரை 20 நாடுகள் இடம்பிடித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT