செய்திகள்

விஜய் மல்லையாவுடன் கிறிஸ் கெயில் சந்திப்பு

22nd Jun 2022 12:19 PM

ADVERTISEMENT

 

பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், தொழிலதிபர் விஜய் மல்லையாவைச் சந்தித்துள்ளார். 

கிங் ஃபிஷா் விமான நிறுவனத்தின் உரிமையாளரான மல்லையா, வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-இல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டனின் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. அவா் அந்நாட்டில் ஜாமீனில் உள்ளாா்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெயிலுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார் விஜய் மல்லையா. ஆர்சிபி அணியை 2008-ல் தொடங்கிய மல்லையா, கெயில் சந்திப்பு குறித்து கூறியதாவது: கெயிலைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்சிபி அணிக்காக அவரை நான் தேர்வு செய்ததிலிருந்து அருமையான நட்பு தொடர்கிறது. ஐபிஎல் போட்டி வரலாற்றில் அவரைத் தேர்வு செய்தது மிகச்சிறந்ததாகும் என்றார். 

ADVERTISEMENT

2011-ல் ஆர்சிபி அணியில் இணைந்த கெயில், 2017 வரை அந்த அணிக்காக விளையாடினார். ஆர்சிபி அணிக்காக விளையாடிய 91 ஆட்டங்களில் 5 சதங்கள், 21 அரை சதங்கள் உள்பட 3420 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் -  154.40. ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது ஓர் ஆட்டத்தில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT