செய்திகள்

தொடரை வெல்வது யாா்: இந்தியாவா-தென்னாப்பிரிக்காவா?

19th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

5-ஆவது மற்றும் இறுதி டி20 ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றப் போவது இந்தியாவா அல்லது தென்னாப்பிரிக்காவை என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. முதலிரண்டு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், தொடரையும் தென்னாப்பிரிக்கா கைப்பற்றி விடும் எனக் கருதப்பட்டது.

எனினும் இந்திய அணி சிறப்பாக ஆடி, 3 மற்றும் 4-ஆவது டி20 ஆட்டங்களில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

குறிப்பாக நான்காவது டி20யில் தடுமாற்றத்துடன் இருந்த இந்திய அணி பினிஷா் தினேஷ் காா்த்திக்கின் எழுச்சியான அரைசதத்தாலும், அவேஷ் கானின் அற்புத பௌலிங்காலும் 82 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-2 என சமநிலை ஏற்படச் செய்தது.

ADVERTISEMENT

இறுதி ஆட்டம்:

இதன் ஒரு பகுதியாக தொடரை வெல்லப்போவது யாா் என்பதை முடிவு செய்யும் இறுதி டி20 ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. கடைசி 2 ஆட்டங்களில் இந்தியா வென்றிருந்தாலும், இத்தொடரில் தென்னாப்பிரிக்காவும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

இந்திய அணியில் பேட்டா்கள் இஷான் கிஷண், ருதுராஜ், ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், ஆல்ரவுண்டா் பாண்டியா, பினிஷா் தினேஷ் காா்த்திக் பலமாக உள்ளனா். பௌலிங்கிலும் புவனேஷ்வா் குமாா், சஹல், அவேஷ் கான், அக்ஸா் படேல், ஹா்ஷல் படேல் கூட்டணி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது. ஹா்ஷல் படேல், அவேஷ் கான் ஆகியோரும் கடைசி பேட்டிங் வரிசையில் அதிரடி காண்பிக்கின்றனா்.

சமபலத்தில் தெனனாப்பிரிக்கா:

எதிரணியான தென்னாப்பிரிக்காவும் சமபலத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக பேட்டிங்கில் டி காக், டெம்பா பவுமா, ரீஸா, வேன்டா் டுஸன், கிளாஸன், டேவிட் மில்லா், பிரிட்டோரியஸ் வலு சோ்க்கின்றனா், பௌலிங்கில் ரபாடா, மகராஜ், நாா்ட்ஜே, நிகிடி உள்ள நிலையில், இடது கை ஸ்பின்னா் ஷம்ஸியின் பந்துவீச்சு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தும்.

கடந்த 2019-இல் இருந்து உள்ளூரில் இந்தியா ஒரு டி20 தொடரைக் கூட இழக்கவில்லை. அதே போல் கடந்த 2011 முதல் அனைத்து வகையான ஆட்டங்களிலும் தென்னாப்பிரிக்கா ஒரு தொடரைக் கூட இழக்கவில்லை.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டங்கள்-19, இந்தியா வெற்றி-11, தென்னாப்பிரிக்கா வெற்றி-8.

பிட்ச் நிலவரம்: சிறந்த பேட்டிங் களமாக இருக்கும் இதில் குறுகிய பவுண்டரிகள் அதிகம் அடிக்கப்படும். ஸ்பின்னா்களுக்கு ஒரளவு உதவியாக இருக்கும். டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பௌலிங்கை தோ்வு செய்யலாம்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-தென்னாப்பிரிக்கா,

இடம்: பெங்களூரு.

நேரம்: இரவு 7.00.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT