செய்திகள்

ஏமாற்றிய யார்க்கர்கள்: இந்திய அணியில் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

ச. ந. கண்ணன்

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இரு இந்திய அணிகளின் பட்டியல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

ஓர் அணிக்கு ரிஷப் பந்த் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறார். இன்னொரு பட்டியலில் உள்ள பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது.

இந்த இரு அணிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை.

*

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார் நடராஜன். ஆஸ்திரேலியாவில் ஊரே வியக்கும்படி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் அறிமுகமானபோதே நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு ஏப்ரல் மாத இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தயாராக இருந்தார் நடராஜன். ஆனால் அங்கு சென்றபிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியிலும் அவரால் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. 

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நடராஜன் தேர்வாகாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் கூறியதாவது: (ஐபிஎல் 2022 போட்டியில்) நடராஜன் நன்குப் பந்துவீசி வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக் கோப்பையில் அவரைத் தவறவிட்டு விட்டோம். நல்ல உடற்தகுதியுடன் இருந்திருந்தால் இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடித்திருப்பார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜனுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவரால் விளையாட முடியவில்லை. கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். மிகத்திறமையுடன் யார்க்கர் பந்துகளை வீசுவார். நீங்கள் நினைப்பதை விடவும் வேகமாகப் பந்துவீசி பேட்டர்களுக்குச் சிரமம் அளிப்பார். ஆஸ்திரேலியாவில் நாங்கள் நடராஜனைத் தேர்வு செய்த எல்லா ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது. டெஸ்டில் அறிமுகமானபோதும் வெற்றியடைந்தோம் என்றார். 

பிறகு என்ன ஆனது? 

*

ஐபிஎல் 2022 போட்டியில் ஆரம்பத்தில் சஹாலுக்குப் போட்டியாக அதிக விக்கெட்டுகள் எடுத்து வந்தார் நடராஜன். எனினும் நடுவில் காயம் ஏற்பட்டதால் அவரால் சில ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. எனினும் 11 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள் எடுத்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 12-ம் இடம். எகானமி - 9.44. 

2017 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் நடராஜன். இந்தமுறை தான் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல இந்தமுறை தான் அதிக ரன்களையும் கொடுத்துள்ளார். ஐபிஎல் 2020 போட்டியில் 16 விக்கெட்டுகளுடன் எகானமி - 8.02 என இருந்தது. 71 யார்க்கர் பந்துகளை வீசினார். இதன் காரணமாக அவர் இந்திய அணிக்குத் தேர்வானார். ஐபிஎல் 2022 போட்டியில் நிறைய விக்கெட்டுகள் எடுத்தும் இதர அம்சங்கள் நடராஜனுக்குச் சாதகமாக அமையவில்லை.

*

ஒரு சிறிய கிராமத்திலிருந்து கிளம்பி சர்வதேச அரங்கில் சாதித்து பலருக்கும் பெரிய ஊக்கமாக உள்ளார் 31 வயது நடராஜன். 2020-ல் நடந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? 

ஆஸ்திரேலியாவில் நடராஜனுக்கு நிகழ்ந்ததை கற்பனையில் கூட யாராலும் யோசிக்க முடியாது. 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள். 

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார். 

கான்பெராவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி, பவர்பிளேயில் விக்கெட் எடுக்காத குறையைத் தீர்த்தார். ஆஸி. வீரர் லபுஷேன், நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.

இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார் நடராஜன். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஒரு ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும் மூன்று டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்ற பாண்டியா, நடராஜன் இவ்விருதுக்குத் தகுதியானவர் என்று கூறி பாராட்டினார். அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றார் நடராஜன். நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். இதனால் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த நடராஜன், இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார். சிட்னி டெஸ்டில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவர்கள் இடம்பெறவில்லை. இதனால் 4-வது டெஸ்டில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அவருடன் இணைந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை ஆஸ்திரேலியாவில் பெற்றார் நடராஜன். 4-வது டெஸ்ட் நடைபெற்ற பிரிஸ்பேனில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி 4-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியில் நடராஜனின் பங்கும் சிறிய அளவில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

ஆஸ்திரேலியாவில் சாதித்த நடராஜனுக்கு கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அப்போது சமூகவலைத்தளங்கள் முழுக்க நடராஜனைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. நடராஜனின் இந்தச் சாதனையைத் தங்கள் வீட்டுப் பிள்ளை ஒருவர் சாதித்ததாகவே தமிழர்கள் எண்ணினார்கள். 

எளிமையான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்த நடராஜன் முதலில் ஆசைப்பட்டது, ஜெயபிரகாஷ் அண்ணனின் டென்னிஸ் பந்து அணிக்குத் தேர்வாக வேண்டும் என்பதுதான். அடுத்ததாக தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று கனவு கொண்டார். ஆனால் அவருடைய திறமையும் உழைப்பும் பொறுமையும் ஆஸ்திரேலியா வரைக்கும் கொண்டு சென்றது. திறமைசாலிக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு.

ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு 2021-ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கும் நடராஜன் தேர்வானார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தின் கடைசி ஓவரைச் சிறப்பாக வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் நடராஜன். கடைசி ஓவரில் சாம் கரண் விளையாடினார். இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டபோது தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அந்த ஓவரில் சாம் கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 

இந்திய அணிக்காக இதுவரை 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் நடராஜன் விளையாடியுள்ளார்.

2017-ல் சேலத்தில் கிரிக்கெட் அகாதெமியை ஆரம்பித்தார். அடுத்ததாக சின்னப்பம்பட்டியில் 4.5 ஏக்கர் அளவில் ஒரு மைதானத்தை உருவாக்கி வருகிறார் நடராஜன்.

*

ஐபிஎல் 2022 ஏலத்தில் நடராஜனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. நடராஜனைத் தேர்வு செய்ய பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கடுமையாகப் போராடியும் இறுதியில் சன்ரைசர்ஸுக்கே வெற்றி கிடைத்தது. முதலில் ரூ. 3 கோடி, அடுத்தது ரூ. 40 லட்சம், இப்போது ரூ. 4 கோடி என ஐபிஎல் ஏலத்தில் விதவிதமான தொகைக்கு நடராஜன் தேர்வாகியுள்ளார். 

*

ஐபிஎல் 2022 போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்ட நடராஜன், 2020-ம் ஆண்டு போல துல்லியமான முறையில் யார்க்கர்களை வீசவில்லை. கர்நாடக முன்னாள் வீரர் ஸ்ரீநாத் அரவிந்தின் மேற்பார்வையில் பயிற்சிகள் மேற்கொண்டு தனது பந்துவீசும் முறை லேசாக மாற்றிக்கொண்டுள்ளார். புதிய ஆக்‌ஷன் முறையில் தன்னால் இன்னும் அதிகமாகப் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்றார். என்னவோ, முன்புபோல நிறைய யார்க்கர்களை வீசி நடராஜன் ஈர்க்கவில்லை. கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்கள். எது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடராஜனுக்குப் பலமாக இருந்ததோ அதுவே இந்தமுறை கீழே தள்ளிவிட்டது.

ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணிக்கான தேர்வுக்குழுவினர் நடராஜன் பக்கம் திரும்பாததற்கு முக்கியக் காரணம், கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் அவர் ஏராளமான ரன்களைக் கொடுத்ததுதான்.

ஐபிஎல் 2022: கடைசி 4 ஆட்டங்களில் நடராஜன்

0/43
2/42
1/43
0/60

அதிலும் கடைசியாக மும்பைக்கு எதிராக விளையாடிய ஆட்டம் நடராஜனுக்குக் கிடைக்கவிருந்த அடுத்தக்கட்ட வாய்ப்புகளை ஒரேடியாகக் கீழே தள்ளியது.

அன்று வீசிய கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்கள் கொடுத்தார் நடராஜன். அந்த ஓவரில் டிம் டேவிட் நான்கு சிக்ஸர்களை அடித்து மோசமான அனுபவத்தை நடராஜனுக்கு ஏற்படுத்தினார். எல்லாமே யார்க்கர்களை வீச முயன்று தவறிப்போனதால் சிக்ஸர்களாகப் பறந்தன. இதற்குப் பிறகு நடராஜனைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு எப்படி மனம் வரும்? 

அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவே நடராஜனைத் தவிர்க்கும் தேர்வுக்குழு வேறு எந்த நாட்டுக்கு எதிராக விளையாட அவரைத் தேர்வு செய்யும்? இதனால் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பைத் திட்டத்தில் நடராஜன் நிச்சயமாக இல்லை என்று எண்ணலாமா? மேலும் நடராஜனைப் போலவே இடக்கைப் பந்துவீச்சாளராகக் கடைசி ஓவர்களில் நன்கு யார்க்கர்களை வீசும் அர்ஷ்தீப் சிங், தேர்வுக்குழுவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

நடராஜனால் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக முடியுமா?

நடராஜன் தனது உடற்தகுதியை நன்கு மேம்படுத்த வேண்டும், 2020-ல் வீசியதுபோல கில்லியாக யார்க்கர்களை வீசவேண்டும். அதுதான் அவருடைய அடையாளம். தவிரவும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேவை இந்திய அணியில் உருவாக வேண்டும். அப்போது தான் டிராவிட், சேதன் சர்மாவின் திட்டங்களுக்குள் நடராஜனால் நுழைய முடியும். 

இந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினாலும் தேர்வுக்குழுவுக்கு நடராஜன் மீது நம்பிக்கை வருமா எனத் தெரியவில்லை. இதே நிலைமை நீடித்தால் ஐபிஎல் 2023 போட்டிதான் நடராஜனை மீட்டுக்கொண்டு வரவேண்டும். சாதிக்க இன்னும் காலம் இருக்கிறது. நடராஜன் பார்க்காத தடைகள் இல்லை. இது இன்னொன்று. அவ்வளவுதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT