செய்திகள்

இந்தியாவுக்கு காபா, இங்கிலாந்துக்கு டிரெண்ட் பிரிட்ஜ்: அட்டகாசமான வெற்றியை வழங்கிய பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் (விடியோ)

15th Jun 2022 10:07 AM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. 

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 128.2 ஓவர்களில் 539 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 176, போப் 145 ரன்கள் எடுத்தார்கள். நியூசி. அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ADVERTISEMENT

2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 4-ம் நாள் முடிவில்  69 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. 5-ம் நாளில் 84.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி அட்டகாசமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. பேர்ஸ்டோ 92 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் கடினமான இலக்கை விரட்டியதுபோல இங்கிலாந்து அணி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடி மறக்க முடியாத வெற்றியை அடைந்தது. 

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது டெஸ்ட், லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 23 அன்று தொடங்கும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT