செய்திகள்

கடினமான ஆடுகளம்: இந்தியா 148 ரன்கள் சேர்ப்பு

12th Jun 2022 08:53 PM

ADVERTISEMENT


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யாததால், தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னுக்கு ககிசோ ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, இஷான் கிஷன் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை சற்று உயர்த்தினார். ஷ்ரேயஸ் ஐயர் மறுமுனையில் ரன் சேர்ப்பதற்குத் திணறினார். நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வந்த கிஷன் பவர் பிளே முடிந்தவுடன் அன்ரிக் நோர்க்கியா வேகத்தில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து கேசவ் மகாராஜிடம் விக்கெட்டை இழந்தார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கஒரு ஐபிஎல் ஆட்டத்துக்கு ரூ. 100 கோடி: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் புதிய உச்சம்

இதன்பிறகு இந்தியாவுக்கு சரிவு ஏற்பட்டது. ஹார்திக் பாண்டியா 9 ரன்களுக்கு வெய்ன் பார்னெல் வேகத்தில் போல்டானார். நிலைத்து நின்று விளையாடி வந்த ஷ்ரேயஸ் 40 ரன்களுக்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அக்சர் படேலும் பெரிய இன்னிங்ஸை ஆடாமல் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி நேர அதிரடிக்கு காத்திருந்தார். அவராலும் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு 7-ஐ தாண்டவில்லை.

ஆனால், கடைசி 2 ஓவர்களில் கார்த்திக் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். நோர்க்கியா வீசிய 19-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

பிறகு, ட்வைன் பிரிடோரியஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹர்ஷல் படேல். அதே ஓவரின் கடைசி 3 பந்துகளை எதிர்கொண்ட கார்த்திக் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 21 பந்துகளில் 30 ரன்களும், ஹர்ஷல் படேல் 9 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க தரப்பில் அன்ரிக் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா, வெய்ன் பார்னெல், ட்வைன் பிரிடோரியஸ், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT