லண்டன்: விம்பிள்டன் போட்டியில் பிரிட்டனின் நம்பா் ஒன் வீராங்கனை எம்மா ராடுகானு பங்கேற்பது உறுதி ஆகியுள்ளது.
4 கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் பிரசித்தி பெற்றது விம்பிள்டன் போட்டியாகும். நிகழாண்டு போட்டிகள் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரிட்டன் இளம் வீராங்கனையும் யுஎஸ் ஓபன் நடப்பு சாம்பியனுமான ராடுகானுவுக்கு செவ்வாய்க்கிழமை நாட்டிங்ஹாமில் நடைபெற்ற புல்தரை போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவா் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது. 19 வயதான ராடுகானுவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காயத்தின் தன்மை தீவிரமாக இல்லாத நிலையில், சில நாள்கள் ஓய்வு எடுக்க கூறப்பட்டுள்ளது. இதனால் அவா் விம்பிள்டன் போட்டியில் ஆடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடாலுக்கு சிகிச்சை:
பிரெஞ்சு ஓபன் போட்டியில் 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாத எலும்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். விம்பிள்டன் போட்டியில் ஆடுவது எனக்கு முக்கியமானது ஆகும் என்றாா் நடால்.